/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
கொனேரு ஹம்பி 'சாம்பியன்': உலக 'ரேபிட்' செஸ் தொடரில்
/
கொனேரு ஹம்பி 'சாம்பியன்': உலக 'ரேபிட்' செஸ் தொடரில்
கொனேரு ஹம்பி 'சாம்பியன்': உலக 'ரேபிட்' செஸ் தொடரில்
கொனேரு ஹம்பி 'சாம்பியன்': உலக 'ரேபிட்' செஸ் தொடரில்
UPDATED : டிச 29, 2024 11:00 PM
ADDED : டிச 29, 2024 10:26 PM

நியூயார்க்: உலக 'ரேபிட்' செஸ் தொடரில் இந்திய வீராங்கனை ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், உலக 'ரேபிட் அண்ட் பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 'ரேபிட்' பிரிவு 11வது, கடைசி சுற்றில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, இந்தோனேஷியாவின் ஐரின் சுகந்தர் மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய ஹம்பி, 30வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
11 சுற்றுகளின் முடிவில், 7 வெற்றி, 3 'டிரா', ஒரு தோல்வி என 8.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த ஹம்பி, உலக 'ரேபிட்' சாம்பியன் பட்டத்தை 2வது முறையாக கைப்பற்றினார். இதற்கு முன் 2019ல் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த உலக 'ரேபிட்' தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். உலக 'ரேபிட்' சாம்பியன் பட்டத்தை இரண்டு முறை கைப்பற்றிய 2வது வீராங்கனையானார் ஹம்பி. ஏற்கனவே சீனாவின் ஜு வென்ஜுன் 2 முறை (2017, 2018) கோப்பை வென்றிருந்தார்.
இரண்டாவது இடத்தை தலா 8 புள்ளிகளுடன் 'நடப்பு உலக சாம்பியன்' சீனாவின் ஜு வென்ஜுன், ரஷ்யாவின் கேடரினா லாக்னோ, இந்தியாவின் ஹரிகா உள்ளிட்ட 6 பேர் பகிர்ந்து கொண்டனர். இதில் 'டை பிரேக்கர்' முறையில் வென்ஜுன் 2வது இடம் பிடித்தார். லாக்னோவுக்கு 3வது இடம் கிடைத்தது. இந்தியாவின் ஹரிகா 5வது இடத்தை கைப்பற்றினார்.
மற்ற இந்திய வீராங்கனைகளான திவ்யா தேஷ்முக் (7.0 புள்ளி) 21வது, பத்மினி ராத் (6.5) 26வது, வைஷாலி (5.5) 52வது இடம் பிடித்தனர்.
ஹம்பி கூறுகையில், ''உலக 'ரேபிட்' பட்டம் வென்றது மகிழ்ச்சி. எனது குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமல், 37 வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்க முடியாது,'' என்றார்.
அர்ஜுன் 5வது இடம்
ஓபன் பிரிவில் ரஷ்ய வீரர் வோலோடர் முர்சின் (10.0 புள்ளி) சாம்பியன் பட்டம் வென்றார். இந்தியாவின் அர்ஜுன் (9.0 புள்ளி) 5வது, பிரக்ஞானந்தா (8.5) 17வது, அரவிந்த் சிதம்பரம் (8.0) 40வது இடம் பிடித்தனர்.
ராசியான ஆண்டு
நடப்பு ஆண்டு, செஸ் அரங்கில் இந்தியாவுக்கு ராசியானதாக அமைந்தது. கடந்த செப்டம்பர் மாதம் ஹங்கேரியில் நடந்த 'செஸ் ஒலிம்பியாட்' தொடரில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. அக்டோபரில், லண்டனில் நடந்த செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை தொடரில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி சாம்பியன் ஆனார். சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் (அக். 5-11) தொடரில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் கோப்பை வென்றார். கடந்த ஏப்ரல் மாதம் கனடாவில் நடந்த 'கேண்டிடேட்ஸ்' தொடரில் கோப்பை வென்ற இந்தியாவின் குகேஷ், சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 'உலக சாம்பியன்' ஆனார். இந்த ராசி, புத்தாண்டிலும் (2025) தொடரும் என நம்பலாம்.