ADDED : ஜூன் 07, 2026 11:01 PM

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில், 'சூப்பர் 1000' அந்தஸ்து பெற்ற இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், ஜப்பானின் அகானே யமாகுச்சி, தென் கொரியாவின் ஆன் சே யங் மோதினர். அபாரமாக ஆடிய ஆன் சே யங் 23-21, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக (2021, 2025, 2026) சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் கனடாவின் விக்டர் லாய், இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டி மோதினர். இதில் விக்டர் லாய் 21-19, 21-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
யுவராஜ், அதிதி தேர்வு
புதுடில்லி: ஜப்பானில், ஆசிய விளையாட்டு (செப். 19 - அக். 4) நடக்கவுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள கோல்ப் போட்டிக்கான 6 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் யுவராஜ் சாந்து, அதிதி உள்ளிட்டோருடன் வீர் அஹ்லாவத், சப்தக் தல்வார், திக் ஷா தாகர், பிரணவி உர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிய விளையாட்டு கோல்ப் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி என, 6 பதக்கம் கிடைத்துள்ளன. இந்தியாவின் லட்சுமண் சிங் (1982), ஷிவ் கபூர் (2002) தனிநபர் பிரிவில் தங்கம் வென்றிருந்தனர். அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் (1982), மூன்று வெள்ளி (2006, 2010, 2023) கிடைத்தது.
மழையால் போட்டி ரத்து
கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இலங்கை வென்றது. இரண்டாவது போட்டி கிங்ஸ்டனில் நடக்க இருந்தது. ஆனால் கனமழையால் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் போட்டி ரத்து செய்யப்பட்டது. மூன்றாவது போட்டி ஜூன் 9ல் கிங்ஸ்டனில் நடக்கவுள்ளது. இலங்கை அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.
