/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பைனலுக்கு முன்னேறினார் மனுபாகர் * துப்பாக்கி சுடுதலில் அபாரம்
/
பைனலுக்கு முன்னேறினார் மனுபாகர் * துப்பாக்கி சுடுதலில் அபாரம்
பைனலுக்கு முன்னேறினார் மனுபாகர் * துப்பாக்கி சுடுதலில் அபாரம்
பைனலுக்கு முன்னேறினார் மனுபாகர் * துப்பாக்கி சுடுதலில் அபாரம்
ADDED : ஜூலை 27, 2024 11:14 PM

பாரிஸ்: ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் பெண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவு பைனலுக்கு முன்னேறினார் இந்தியாவின் மனுபாகர்.
பிரான்சில் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. நேற்று துப்பாக்கிசுடுதல் போட்டி நடந்தன. பெண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்தியா சார்பில் மனுபாகர், ரிதம் சங்வான் பங்கேற்றனர்.
தகுதிச்சுற்றில் 'டாப்-8' இடம் பிடித்தால் பைனலுக்கு முன்னேறலாம் என்ற நிலையில், 22 வயதான மனுபாகர் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட்டார். மொத்தம் தரப்பட்ட 6 'சீரிஸ்' வாய்ப்புகளில் மொத்தம் 580 புள்ளி (97, 97, 98, 96, 96, 96) எடுத்து, மூன்றாவது இடம் பெற்று பைனலுக்கு முன்னேறினார். ரிதம் சங்வான் 573 புள்ளி மட்டும் எடுக்க, 15 இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தார்.
சரப்ஜோத் 'ஷாக்'
ஆண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்தியா சார்பில் சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் களமிறங்கினர். இதில் சரப்ஜோத் சிங் 577 புள்ளி பெற்று, 9 வது இடம் பிடித்தார். 'டாப்-8' இடம் பெற்றால் மட்டுமே பைனலுக்கு செல்ல முடியும் என்பதால், சரப்ஜோத் சோகமாக வெளியேறினார். அர்ஜுன் சிங், 574 புள்ளியுடன் 18 வது இடம் பிடித்தார்.
இளவேனில் ஏமாற்றம்
10 மீ., ஏர் ரைபிள் கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் ரமிதா-அர்ஜுன், இளவேனில்-சந்தீப் ஜோடி களமிறங்கியது. இதன் தகுதிச்சுற்றில் 'டாப்-4' இடம் பெற்றால் மட்டுமே பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்கலாம் என்ற நிலையில், ரமிதா (314.5 புள்ளி), அர்ஜுன் (314.2) இணைந்து 628.7 புள்ளி மட்டும் எடுக்க, ஆறாவது இடம் தான் கிடைத்தது.
மற்றொரு ஜோடி இளவேனில் (312.6), சந்தீப் (313.7) இணைந்து 626.3 புள்ளி மட்டும் எடுத்து, 12 வது இடத்துக்கு தள்ளப்பட்டனர். 'டாப்-4' இடம் பெற்றால் மட்டுமே பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால், இந்தியாவுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.
முதல் தங்கப்பதக்கம் வென்றது சீனா.
நேற்று நடந்த 10 மீ., ஏர் ரைபிள் கலப்பு அணிகளுக்கான போட்டியில் தகுதிச்சுற்றில் சீனாவின் யூட்டிங் ஹூவாங், லிஹாவோ ஜோடி (632.2 புள்ளி), தென் கொரியாவின் ஜியியான், ஹஜுன் ஜோடி (631.4) முதல் இரு இடம் பெற்று, தங்கப்பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றது.
இதில் சிறப்பாக செயல்பட்ட சீன ஜோடி 16-12 என வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றியது. இதில் 17 வயது வீராங்கனை யூட்டிங், 2022, உலக சாம்பியன்ஷிப்பில் தான், சர்வதேச அரங்கில் அறிமுகம் ஆனார். முதன் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். முதல் போட்டியில் தங்கம் வசப்படுத்தி அசத்தினார்.
இதேபோல 19 வயது வீரர் லிஹாவோவும், முதல் ஒலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்றியுள்ளார்.
* இப்போட்டியில் கஜகஸ்தானின் அலெக்சாண்ட்ரா, இஸ்லாம் ஜோடி (630.8), ஜெர்மனியின் அன்னா யான்சென், மேக்ஸ்மில்லன் ஜோடி (629.7) 3, 4 வது இடம் பெற்று, வெண்கலப் பதக்கத்திற்காக மோதியது. இதில் கஜகஸ்தான் ஜோடி 17-5 என வெற்றி பெற்று, வெண்கலம் வசப்படுத்தியது.
பால்ராஜ் 'நான்கு'
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு படகு வலித்தல் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் பால்ராஜ் 25, பன்வார் களமிறங்கினார். தகுதிச்சுற்றில் 'டாப்-3' இடம் பெற்றால் காலிறுதிக்கு முன்னேறலாம். ஆனால் பால்ராஜ், 7 நிமிடம், 07:11 வினாடி நேரத்தில் வந்து நான்காவது இடம் பிடித்து ஏமாற்றம் தந்தார்.
தற்போது 'ரெப்பிசேஜ்' பிரிவில் பங்கேற்க உள்ளார். இதில் சிறப்பாக செயல்பட்டால், காலிறுதிக்கு முன்னேறலாம்.