/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் தமிழக வீரர் ரோகித் * தேசிய விளையாட்டு நீச்சலில் அசத்தல் * தினிதி 'ஹாட்ரிக்' பதக்கம்
/
தங்கம் வென்றார் தமிழக வீரர் ரோகித் * தேசிய விளையாட்டு நீச்சலில் அசத்தல் * தினிதி 'ஹாட்ரிக்' பதக்கம்
தங்கம் வென்றார் தமிழக வீரர் ரோகித் * தேசிய விளையாட்டு நீச்சலில் அசத்தல் * தினிதி 'ஹாட்ரிக்' பதக்கம்
தங்கம் வென்றார் தமிழக வீரர் ரோகித் * தேசிய விளையாட்டு நீச்சலில் அசத்தல் * தினிதி 'ஹாட்ரிக்' பதக்கம்
ADDED : ஜன 29, 2025 11:02 PM

ஹல்டுவானி: தேசிய விளையாட்டு நீச்சலில் தமிழகத்தின் ரோகித், தங்கப்பதக்கம் வென்றார். கர்நாடகாவின் 14 வயது வீராங்கனை தினிதி தேசிங்கு, ஒரே நாளில் 'ஹாட்ரிக்' தங்கம் வென்று அசத்தினார்.
இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் நடக்கிறது. 37 அணிகளில் இருந்து 10,000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 18 நாள் நடக்கும் இதில் நீச்சல், துப்பாக்கிசுடுதல், மல்யுத்தம், பாட்மின்டன், ஹாக்கி உட்பட 32 விளையாட்டுகளில் போட்டிகள் நடக்கின்றன.
ரோகித் அபாரம்
ஆண்களுக்கான 100 மீ., பட்டர்பிளை போட்டி நடந்தது. தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற பெனெடிக்சன் ரோகித், 53.89 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். ஆண்களுக்கான 4X100 மீ., ரிலே போட்டியில் தமிழக அணி (3 நிமிடம், 29.92 வினாடி) வெள்ளி வென்றது. பெண்களுக்கான 4X100 மீ., ரிலே போட்டியில் தமிழகம், வெண்கலம் கைப்பற்றியது.
தினிதி கலக்கல்
பெண்களுக்கான 100 மீ., பட்டர்பிளை நீச்சல் தகுதி போட்டியில் கர்நாடகாவின் தினிதி தேசிங்கு, முதலிடம் பிடித்தார். அடுத்து பைனல் நடந்தது. இதில் தினிதி 1 நிமிடம், 3.62 வினாடி நேரத்தில் வந்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். நைஸ்ஷா (1:04.81, கர்நாடகா), ஸ்ரீஸ்டி (1:05.20, ஒடிசா) அடுத்த இரு இடம் பிடித்தனர்.
பெண்களுக்கான 200 மீ., பிரீஸ்டைல் நீச்சல் நடந்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட தினிதி, 2 நிமிடம், 3.24 வினாடி நேரத்தில் வந்து, தேசிய சாதனை படைத்து தங்கம் கைப்பற்றினார். இதற்கு முன் 2022ல் கர்நாடகாவின் ஹாஷிகா 2 நிமிடம், 7.08 வினாடியில் தங்கம் வென்றிருந்தார்.
டில்லியின் பாவ்யா (2:08.68), மஹாராஷ்டிராவின் ஆதித்தி (2:09.74) வெள்ளி, வெண்கலம் வென்றனர். தொடர்ந்து பெண்களுக்கான 4x100 மீ., ரிலே போட்டியில் தினிதி இடம் பெற்ற அணி தங்கம் வசப்படுத்தியது. இது இவர் வென்ற மூன்றாவது தங்கம் ஆனது.
ஆண்களுக்கான 200 மீ., பிரீஸ்டைல் போட்டியில் கர்நாடகாவின் ஸ்ரீஹரி நடராஜ் (1:50.57), அனீஷ் (1:52.42), சாஜன் பிரகாஷ் (1:53.73) முதல் மூன்று இடம் பிடித்தனர். ஆண்களுக்கான 4X100 மீ., ரிலே போட்டியில் ஸ்ரீஹரி நடராஜ் இடம் பெற்ற அணி தங்கம் கைப்பற்றியது.
கூடைப்பந்தில் வெற்றி
பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது முதல் போட்டியில் 125-67 என சத்தீஷ்கரை வென்றது. தமிழக ஆண்கள் அணி 76-69 என சர்வீசஸ் அணியை வீழ்த்தியது.
* வாட்டர் போலோ போட்டியில் தமிழக ஆண்கள் அணி 0-25 என கேரளாவிடம் தோல்வியடைந்தது.
* பெண்களுக்கான ரக்பி செவன்ஸ் 'பி' பிரிவு போட்டியில் தமிழக அணி 0-68 என மஹாராஷ்டிராவிடம் வீழ்ந்தது.
ரமிதா முதலிடம்
துப்பாக்கிசுடுதல் 10 மீ., ஏர் ரைபிள் பிரிவு தகுதிச்சுற்றில் ஹரியானாவின் ரமிதா, 634.9 புள்ளி எடுத்து முதலிடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார். தமிழகத்தின் நர்மதா, மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ஆண்கள் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் பஞ்சாப்பின் விஜய்வீர் சித்து 587 புள்ளியுடன் முதலிடம் பிடித்தார்.