/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தமிழக அணி கலக்கல் * தேசிய விளையாட்டு டென்னிசில்
/
தமிழக அணி கலக்கல் * தேசிய விளையாட்டு டென்னிசில்
ADDED : பிப் 07, 2025 11:03 PM

டேராடூன்: தேசிய விளையாட்டு டென்னிசில் தமிழகத்தின் அபினவ் சண்முகம், மணிஷ் சுரேஷ் குமார் இடம் பெற்ற அணி தங்கம் கைப்பற்றியது.
இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் நடக்கிறது. ஆண்கள் அணிகளுக்கான டென்னிஸ் பைனலில் தமிழகம், கர்நாடகா மோதின. முதல் போட்டியில் தமிழகத்தின் அபினவ் சண்முகம், 3-6, 7-6, 6-4 என ரிஷி ரெட்டியை வீழ்த்தினார். இரண்டாவது போட்டியில் தமிழகத்தின் மணிஷ் சுரேஷ் குமார், பிரஜ்வல் தேவை சந்தித்தார். இதில் மணிஷ் 5-7, 6-4, 6-4 என வென்றார். முடிவில் 2-0 என வெற்றி பெற்று, தமிழக அணி தங்கப்பதக்கம் கைப்பற்றியது.
லவ்லினா கலக்கல்
பெண்களுக்கான குத்துச்சண்டை 75 கிலோ பிரிவு பைனலில் அசாமின் லவ்லினா, சண்டிகரின் பிரான்ஷு மோதினர். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினா, 5-0 என எளிதாக வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றினார்.
60 கிலோ பிரிவு பைனலில் காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் கைப்பற்றிய, சர்வீசஸ் வீராங்கனை ஜாஸ்மின், 5-0 என, உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற மணிஷாவை (ஹரியானா) சாய்த்து தங்கம் வசப்படுத்தினார்.
ஆண்களுக்கான வெல்டர்வெயிட் (63.5 கிலோ) பிரிவு பைனலில் ஆறுமுறை ஆசிய சாம்பியன் ஆன அசாமின் ஷிவா தபா, சர்வீசஸ் அணியின் வன்ஷாஜ் மோதினர். இதில் ஷிவா தபா 3-4 என போராடி தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. வன்ஷாஜ் தங்கம் வென்றார்.
ஆண்களுக்கான கால்பந்து பைனலில் கேரளா அணி 1-0 என உத்தரகாண்ட்டை வீழ்த்தி தங்கம் கைப்பற்றியது. டில்லிக்கு வெண்கலம் கிடைத்தது. பெண்களுக்கான கால்பந்தில் ஹரியானா தங்கம் வென்றது. ஒடிசா (வெள்ளி), மேற்கு வங்கம் (வெண்கலம்) அடுத்த இரு இடம் பிடித்தன.

