/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தமிழகம் ஆறாவது இடம் * நிறைவு பெற்றது தேசிய விளையாட்டு
/
தமிழகம் ஆறாவது இடம் * நிறைவு பெற்றது தேசிய விளையாட்டு
தமிழகம் ஆறாவது இடம் * நிறைவு பெற்றது தேசிய விளையாட்டு
தமிழகம் ஆறாவது இடம் * நிறைவு பெற்றது தேசிய விளையாட்டு
ADDED : பிப் 14, 2025 11:07 PM

டேராடூன்: தேசிய விளையாட்டு பதக்க பட்டியலில் தமிழகம் ஆறாவது இடம் பிடித்தது.
உத்தரகாண்ட்டில் தேசிய விளையாட்டின் 38வது சீசன் நடந்தது. 18 நாள் நடந்த இதில், 37 அணிகளில் இருந்து 10,000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 32 விளையாட்டுகளில் போட்டிகள் நடந்தன.
தமிழகத்தின் ரோகித், தனுஷ் (நீச்சல்), நர்மதா (துப்பாக்கிசுடுதல்), ஆரோக்கியா அலிஷ், அஜித் நாராயணா (பளுதுாக்குதல்), வேலவன் செந்தில் குமார் (ஸ்குவாஷ்), சதிஷ் குமார் (பாட்மின்டன் ஒற்றையர், கலப்பு இரட்டையர்), அபினவ் சண்முகம், மணிஷ் சுரேஷ் குமார் ஜோடி (டென்னிஸ்), செலினா (டேபிள் டென்னிஸ்) உள்ளிட்டோர் தங்கம் கைப்பற்றினர். அணிகளுக்கான போட்டிகளில் ஸ்குவாஷ் (ஆண்கள் இரட்டையர்), கூடைப்பந்து, பீச் வாலிபாலில் தமிழகம் தங்கம் வசப்படுத்தியது.
வித்யா 'ஹாட்ரிக்'
தடகளத்தை பொறுத்தவரையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அசத்திய தமிழகத்தின் வித்யா (400 மீ., தடை ஓட்டம்) 'ஹாட்ரிக்' தங்கம் வசப்படுத்தினார். தவிர பிரவீன் சித்ரவேல் (டிரிபிள் ஜம்ப்), பவித்ரா (போல் வால்ட்), ஆதர்ஷ் ராம் (உயரம் தாண்டுதல்) தங்கள் பங்கிற்கு அசத்தினர்.
கர்நாடகாவின் 15 வயது நீச்சல் வீராங்கனை தினிதி, மொத்தம் 9 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 11 பதக்கம் கைப்பற்றினார்.
தேசிய விளையாட்டில் தமிழகம் 27 தங்கம், 30 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 92 பதக்கம் வென்று, பட்டியலில் 6வது இடம் பிடித்தது.
சிறப்பான எதிர்காலம்
தேசிய விளையாட்டு நிறைவு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உத்தகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முடிவில் தேசிய விளையாட்டு கொடி இறக்கப்பட்டது. 2027ல் தேசிய விளையாட்டு நடக்க உள்ள மேகாலயா முதல்வர் கான்ராடு சங்மாவிடம் கொடி வழங்கப்பட்டது.
அமித் ஷா கூறுகையில்,'' இந்திய விளையாட்டுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் நடத்த தயாராக உள்ளோம். அப்போது நமது நட்சத்திரங்கள் பதக்கங்கள் வென்று, இந்திய தேசியக் கொடியை உயரே பறக்கச் செய்வர்,'' என்றார்.
சர்வீசஸ் 'டாப்'
தேசிய விளையாட்டு பதக்கப்பட்டியலில் சர்வீசஸ் அணி முதலிடம் பிடித்தது. 'டாப்-6' இடம் பிடித்த அணிகள்:
மாநிலம்/அணி தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
சர்வீசஸ் 68 26 27 121
மகாராஷ்டிரா 54 71 76 201
ஹரியானா 48 47 58 153
மத்திய பிரதேசம் 34 26 22 82
கர்நாடகா 34 18 28 80
தமிழகம் 27 30 35 92

