ADDED : ஜூன் 20, 2026 11:26 PM

ஆக்லாந்து: நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் பைனலுக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது. அரையிறுதியில் 6-0 என, சிலியை வென்றது.
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில், பெண்கள் நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி 4வது சீசன் நடக்கிறது. இதன் அரையிறுதியில் இந்தியா, சிலி அணிகள் மோதின. இதில் இந்தியா 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது. இந்திய அணிக்கு நவ்னீத் கவுர் (6, 13வது நிமிடம்), தீபிகா ஷெராவத் (14, 18வது) தலா 2, நேஹா (32வது), ருதுஜா (39வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். ஆட்ட நாயகி விருதை இந்திய கேப்டன் சலிமா வென்றார்.
மற்றொரு அரையிறுதியில் நியூசிலாந்து, அமெரிக்கா அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது. பின், 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் நியூசிலாந்து 4-1 என வெற்றி பெற்றது.
பைனலில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
