/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
காயத்துடன் சாதித்த நீரஜ் சோப்ரா: டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில்
/
காயத்துடன் சாதித்த நீரஜ் சோப்ரா: டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில்
காயத்துடன் சாதித்த நீரஜ் சோப்ரா: டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில்
காயத்துடன் சாதித்த நீரஜ் சோப்ரா: டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில்
ADDED : செப் 15, 2024 11:26 PM

பிரசல்ஸ்: டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் காயத்துடன் பங்கேற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்தார்.
பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில், டைமண்ட் லீக் தடகளத்தின் பைனல் நடந்தது. இதன் ஈட்டி எறிதல் பைனலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா உட்பட 7 பேர் களமிறங்கினர். டோக்கியோ (2021, தங்கம்), பாரிஸ் (2024, வெள்ளி) என அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா மீது எதிர்பார்ப்பு இருந்தது.
இரண்டாவது இடம்: பயிற்சியின் போது இடது கை விரலில் ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாமல் களமிறங்கிய நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 87.86 மீ., துாரம் எறிந்து இரண்டாவது இடம் பிடித்தார். இரண்டு முறை (2019, 2022) உலக சாம்பியன் பட்டம் வென்ற கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், அதிகபட்சமாக 87.87 மீ., துாரம் எறிந்து முதன்முறையாக டைமண்ட் லீக் பட்டத்தை கைப்பற்றினார். இவருக்கு கோப்பையுடன், ரூ. 25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இதையடுத்து நீரஜ் சோப்ரா (87.86 மீ.,) ஒரு செ.மீ., வித்தியாசத்தில் இரண்டாவது இடம் பிடித்தார். கடந்த 2022 டைமண்ட் லீக் பைனலில் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா, கடந்த ஆண்டு இரண்டாவது இடம் பிடித்திருந்தார். நீரஜ் சோப்ராவுக்கு ரூ. 10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. ஜெர்மனியின் ஜூலியன் வெபர் (85.97 மீ.,) மூன்றாவது இடம் பிடித்தார்.
நீரஜ் சோப்ரா கூறுகையில், ''பயிற்சியின் போது இடது கை விரலில் காயமடைந்தேன். 'எக்ஸ்ரே'யில் எலும்பு முறிவு உறுதியானது. இதனால் போட்டியில் பங்கேற்பது சந்தேகமாக இருந்தது. எனது பயிற்சியாளர் குழுவின் உதவியுடன் போட்டியில் பங்கேற்றேன். நடப்பு ஆண்டின் கடைசி போட்டி என்பதால் வெற்றிகரமாக நிறைவு செய்ய விரும்பினேன். ஆனால் அதனை பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்த சீசனில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். காயத்தில் இருந்து விரைவில் மீண்டு, முழு உடற்தகுதியுடன் போட்டிக்கு திரும்புவேன்,'' என்றார்.