/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
நீரஜ் சோப்ரா சாதனை: 90 மீ., இலக்கை எட்டினார்
/
நீரஜ் சோப்ரா சாதனை: 90 மீ., இலக்கை எட்டினார்
ADDED : மே 17, 2025 12:26 AM

தோகா: தோகா டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் அசத்திய இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதன்முறையாக 90 மீ., இலக்கை கடந்து சாதனை படைத்தார்.
டைமண்ட் லீக் தடகளத்தின் 16வது சீசன், 15 சுற்றுகளாக நடக்கிறது. நேற்று, கத்தார் தலைநகர் தோகாவில் 3வது சுற்று நடந்தது. இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா (ஈட்டி எறிதல்), பாருல் சவுத்ரி (3000 மீ., ஸ்டீபிள் சேஸ்), குல்வீர் சிங் (5000 மீ., ஓட்டம்) என முதன்முறையாக 4 பேர் பங்கேற்றனர்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 27, கிஷோர் ஜெனா உள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர். முதல் வாய்ப்பில் 88.44 மீ., எறிந்த நீரஜ் சோப்ரா, 2வது வாய்ப்பை 'பவுல்' செய்தார். பின் எழுச்சி கண்ட இவர், 3வது வாய்ப்பில் 90.23 மீ., எறிந்தார். இதன்மூலம் தனது சொந்த தேசிய சாதனையை முறிடித்தார். இதற்கு முன், 2022ல் 89.94 மீ., எறிந்தது நீரஜ் சோப்ராவின் தேசிய சாதனையாக இருந்தது. தவிர, ஈட்டி எறிதல் வரலாற்றில் 90 மீ., துாரத்திற்கு மேல் எறிந்த முதல் இந்தியர், 3வது ஆசிய வீரர், 25வது சர்வதேச வீரர் ஆனார்.
டோக்கியோ ஒலிம்பிக் 'தங்க மகன்' நீரஜ் சோப்ராவுக்கு ஜெர்மனி வீரர் ஜூலியன் வெபர் துவக்கத்தில் இருந்தே நெருக்கடி கொடுத்து வந்தார். முதல் 5 வாய்ப்பு வரை முதலிடத்தில் இருந்த நீரஜ், தனது கடைசி வாய்ப்பில் 88.20 மீ., எறிந்தார். மறுமுனையில் அசத்திய வெபர், கடைசி வாய்ப்பில் 91.06 மீ., எறிந்து முதலிடத்தை தட்டிச் சென்றார். நீரஜ் சோப்ராவுக்கு 2வது இடம் கிடைத்தது. டைமண்ட் லீக் அரங்கில் 18வது முறையாக களமிறங்கிய நீரஜ் சோப்ரா, 11வது முறையாக 'டாப்-2' இடத்தை கைப்பற்றினார்.
மற்றொரு இந்திய வீரர் கிஷோர் ஜெனா, அதிகபட்சமாக 78.60 மீ., எறிந்து 8வது இடம் பிடித்தார்.
குல்வீர் ஏமாற்றம்: ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் பங்கேற்றார். டைமண்ட் லீக் போட்டியில் முதன்முறையாக களமிறங்கிய இவர், இலக்கை 13 நிமிடம், 24.32 வினாடியில் கடந்து 9வது இடம் பிடித்தார். கென்யாவின் ரெனால்ட் செருயோட் (13 நிமிடம், 16.40 வினாடி) முதலிடத்தை கைப்பற்றினார்.
பெண்களுக்கான 3000 மீ., 'ஸ்டீபிள் சேஸ்' ஓட்டத்தில் பங்கேற்ற இந்தியாவின் பாருல் சவுத்ரி, இலக்கை 9 நிமிடம், 13.39 வினாடியில் கடந்து 6வது இடம் பிடித்தார்.
பயோ டேட்டா
பெயர்: நீரஜ் சோப்ரா
பிறந்த நாள்: 24-12-1997
பிறந்த இடம்: ஹரியானா
விளையாட்டு: தடகளம், ஈட்டி எறிதல்
வென்ற பதக்கம்:
ஒலிம்பிக்: 2020ல் தங்கம், 2024ல் வெள்ளி
உலக சாம்பியன்ஷிப்: 2023ல் தங்கம், 2022ல் வெள்ளி
காமன்வெல்த் விளையாட்டு: 2018ல் தங்கம்
ஆசிய விளையாட்டு: 2018, 2022ல் தங்கம்
ஆசிய சாம்பியன்ஷிப்: 2017ல் தங்கம்
'டாப்-5' செயல்பாடு
நீரஜ் சோப்ராவின் 'டாப்-5' செயல்பாடு
இடம் ஆண்டு இலக்கு
தோகா 2025 90.23 மீ.,
ஸ்டாக்ஹோம் 2022 89.94 மீ.,
லாசேன் 2024 89.49 மீ.,
பாரிஸ் 2024 89.45 மீ.,
பாரிஸ் 2024 89.34 மீ.,