/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
புதிய விளையாட்டு மசோதா: பி. டி. உஷா எச்சரிக்கை
/
புதிய விளையாட்டு மசோதா: பி. டி. உஷா எச்சரிக்கை
ADDED : அக் 18, 2024 10:43 PM

புதுடில்லி: ''புதிய விளையாட்டு மசோதாவின் சில அம்சங்கள், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின் தன்னாட்சியை பாதிக்கிறது. இதனால் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு தடை விதிக்கப்படலாம்,'' என பி.டி.உஷா எச்சரித்தார்.
இந்திய விளையாட்டு அமைப்புகளில் ஊழலை ஒழித்து, வெளிப்படைத்தன்மையை கொண்டு வர, புதிய விளையாட்டு ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இது தொடர்பான மசோதா விரைவில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
இதன்படி தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளை ஒழுங்குமுறை அமைப்பு கண்காணிக்கும். அங்கீகாரம், நிதி உதவி, நிர்வாகிகளின் வயது வரம்பை முடிவு செய்யும். இந்தியாவில் ஏற்படும் விளையாட்டு பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண, தீர்ப்பாயத்தை அமைக்கும்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில்,'கிராமப்புற அளவில் விளையாட்டு வளர்ச்சிக்கு மாநில ஒலிம்பிக் சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், புதிய விளையாட்டு மசோதாவில் மாநில ஒலிம்பிக் சங்கங்களின் நிலை பற்றி தெளிவாக குறிப்பிடவில்லை. அனைத்து அதிகாரமும் ஒழுங்குமுறை அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய ஒலிம்பிக் சங்கம், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின் தன்னாட்சி பாதிக்கப்படும். சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உருவாகும். அரசியல் தலையீடு காரணமாக, 2012ல் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்தது. இதே போல மீண்டும் தடை விதிக்கப்படும் அபாயம் உள்ளது. சர்வதேச விளையாட்டு நிர்வாகத்திற்கு ஏற்ப, மசோதாவின் அம்சங்கள் இருக்க வேண்டும்,' என குறிப்பிட்டுள்ளார்.