ADDED : ஜன 11, 2026 11:36 PM

கோல்கட்டா: கோல்கட்டா செஸ் தொடருக்கான 'பிளிட்ஸ்' பிரிவில் இந்தியாவின் நிஹால் சரின், வந்திகா 2வது இடம் பிடித்தனர்.
கோல்கட்டாவில், டாடா ஸ்டீல் இந்தியா செஸ் ('ரேபிட் அண்ட் பிளிட்ஸ்') தொடர் நடந்தது. ஓபன் பிரிவில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அர்ஜுன் எரிகைசி, நிஹால் சரின், பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் சோ வெஸ்லி உள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர். முதலில் நடந்த 'ரேபிட்' முறையிலான ஓபன் பிரிவில் இந்தியாவின் நிஹால் சரின் சாம்பியன் பட்டம் வென்றார்.
அடுத்து 18 சுற்று கொண்ட 'பிளிட்ஸ்' முறையிலான போட்டிகள் நடந்தன. ஓபன் பிரிவில், 8 வெற்றி, 8 'டிரா', 2 தோல்வி என, 12 புள்ளிகளுடன் அமெரிக்காவின் வெஸ்லி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அடுத்த இரு இடங்களை தலா 11 புள்ளிகளுடன் இந்தியாவின் நிஹால் சரின், அர்ஜுன் எரிகைசி தட்டிச் சென்றனர். மற்ற இந்திய வீரர்களான விதித் குஜ்ராத்தி (10 புள்ளி), பிரக்ஞானந்தா (9.5), ஆனந்த் (8), அரவிந்த் சிதம்பரம் (4) முறையே 5, 6, 8, 10வது இடம் பிடித்தனர்.
பெண்களுக்கான 'பிளிட்ஸ்' பிரிவில், 18 சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் வந்திகா அகர்வால், அமெரிக்காவின் காரிசா யிப் தலா 10.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தனர். அடுத்து நடந்த 'டை பிரேக்கருக்கான' முதல் போட்டியில் ஏமாற்றிய வந்திகா, 2வது போட்டியை 'டிரா' செய்தார். முடிவில் காரியா முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனார். வந்திகா 2வது இடத்தை கைப்பற்றினார்.
மற்ற இந்திய வீராங்கனைகளான வைஷாலி (9.5 புள்ளி), திவ்யா (8.5), ஹரிகா (8), ரக் ஷிதா (6.5) முறையே 5, 8, 9, 10வது இடம் பிடித்தனர்.
