ADDED : ஏப் 13, 2026 11:05 PM

மெனோர்கா: மெனோர்கா செஸ் தொடரில் இந்தியாவின் நிஹால் சரின் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள மெனோர்கா தீவில், சர்வதேச மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடந்தது. 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ், ஹரிகிருஷ்ணா, நிஹால் சரின் உள்ளிட்ட 6 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோதின.
நிஹால் சரின் (வெள்ளை), உக்ரைனின் ரஸ்லன் பொனோமரியோவ் (கருப்பு) மோதிய 10வது சுற்று 14வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
மற்றொரு போட்டியில் குகேஷ் (வெள்ளை), 53வது நகர்த்தலில் ஹங்கேரியின் ரிச்சர்ட் ராபோர்ட்டிடம் (கருப்பு) தோல்வியடைந்தார். ஹரிகிருஷ்ணா (கருப்பு), 26வது நகர்த்தலில் அமெரிக்காவின் லீனியர் டொமிங்குவெஸ் பெரெசிடம் (வெள்ளை) வீழ்ந்தார்.
பத்து சுற்றுகளின் முடிவில், 4 வெற்றி, 4 'டிரா', 2 தோல்வி என, 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த நிஹால் சரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அடுத்த இரு இடங்களை ரஸ்லன் (5.5 புள்ளி), ராபோர்ட் (5.5) தட்டிச் சென்றனர். குகேஷ் (4.5), பெரெஸ் (4.5) முறையே 4, 5வது இடம் பிடித்தனர். கடைசி இடம் ஹரிகிருஷ்ணாவுக்கு (4) கிடைத்தது.
