ADDED : ஜூன் 05, 2024 11:24 PM

ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரின் எட்டாவது சுற்றில் வைஷாலி வெற்றி பெற்றார்.
நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த எட்டாவது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, உக்ரைனின் அனா முசிசுக் மோதினர். 'கிளாசிக்கல்' முறையில் நடந்த இப்போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார் வைஷாலி. 47 வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய 'ஆர்மகெடான் டை-பிரேக்கர்' முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் வைஷாலி, 59 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். ஹம்பி, டிங்ஜீயிடம் (சீனா) தோல்வியடைந்தார்.
எட்டு சுற்று முடிவில் வைஷாலி (11.5) மூன்றாவது இடத்தில் தொடர்கிறார். ஜூ வென்ஜுன் (15.5, சீனா), அனா முசிசுக் (12.0) முதல் இரு இடத்தில் உள்ளனர்.
பிரக்ஞானந்தா 'ஷாக்'
ஓபன் பிரிவு ஏழாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, கார்ல்சன் மோதினர். ஏற்கனவே 3வது சுற்றில் கார்ல்சனை வென்ற பிரக்ஞானந்தா, இம்முறை 'கிளாசிக்கல்' போட்டியை 'டிரா' செய்தார்.
வெற்றியாளரை முடிவு செய்ய 'ஆர்மகெடான் டை-பிரேக்கர்' முறையில் பிரக்ஞானந்தா, 67வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். எட்டு சுற்று முடிவில் முதல் மூன்று இடத்தில் கார்ல்சன் (14.5), நகமுரா (13.5, அமெரிக்கா), பிரக்ஞானந்தா (12.5) உள்ளனர்.