ADDED : மே 31, 2026 11:10 PM

ஓஸ்லோ, ஜூன் 1-
நார்வே செஸ் தொடரின் 5வது சுற்றில் இந்தியாவின் குகேஷ், சகவீரர் பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார்.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில், சர்வதேச செஸ் ('கிளாசிக்கல்') 14வது சீசன் நடக்கிறது. ஆண்கள் பிரிவில் 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, 'நடப்பு சாம்பியன்' நார்வேயின் கார்ல்சன் உள்ளிட்ட 6 பேர் பங்கேற்கின்றனர்.
இதன் 5வது சுற்றில் இந்தியாவின் குகேஷ் (கருப்பு), பிரக்ஞானந்தா (வெள்ளை) மோதினர். இதில் குகேஷ் 47வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் சோ வெஸ்லே (கருப்பு), 58வது நகர்த்தலில் கார்ல்சனை (வெள்ளை) தோற்கடித்தார். ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் (கருப்பு), பிரான்சின் அலிரேசா (வெள்ளை) மோதிய 5வது சுற்று போட்டி 31வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. அடுத்து நடந்த 'டை பிரேக்கரில்' வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அலிரேசா, 51வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
ஐந்து சுற்றுகளின் முடிவில் அலிரேசா, 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அடுத்த இரு இடங்களில் சோ வெஸ்லே (8.5 புள்ளி), குகேஷ் (6.5) உள்ளனர். கடைசி 3 இடங்களில் பிரக்ஞானந்தா (6 புள்ளி), கீமர் (5), கார்ல்சன் (4.5) உள்ளனர்.
திவ்யா வெற்றி
பெண்களுக்கான 5வது சுற்றில் இந்தியாவின் திவ்யா (கருப்பு), சீனாவின் ஜு ஜினெர் (வெள்ளை) மோதினர். இதில் திவ்யா 84வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்தியாவின் கொனேரு ஹம்பி (கருப்பு), சீனாவின் ஜு வென்ஜுன் (வெள்ளை) மோதிய மற்றொரு 5வது சுற்று போட்டி 73வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. அடுத்து நடந்த 'டை பிரேக்கரில்' அசத்திய ஹம்பி, 51வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
ஐந்து சுற்றுகளின் முடிவில் திவ்யா 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஹம்பி (4.5 புள்ளி) 6வது இடத்தில் நீடிக்கிறார்.
