/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹாக்கி: கடைசி நிமிடத்தில் இந்தியா 'டிரா'
/
ஹாக்கி: கடைசி நிமிடத்தில் இந்தியா 'டிரா'
ADDED : ஜூலை 29, 2024 11:13 PM

பாரிஸ்: இந்தியா-அர்ஜென்டினா மோதிய ஹாக்கி லீக் போட்டி 'டிரா' ஆனது. கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கடைசி நிமிடத்தில் கோல் அடித்து கைகொடுத்தார்.
ஒலிம்பிக் ஹாக்கியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன. இந்திய அணி 'பி' பிரிவில் நியூசிலாந்து, அர்ஜென்டினா, அயர்லாந்து, நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஆஸ்திரேலியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
முதல் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தியது. நேற்று தனது இரண்டாவது போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.
போட்டியின் 10 வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதை சஞ்சய் வீணடித்தார். 12வது நிமிடம் அர்ஜென்டினா வீரர் அகஸ்டின் அடித்த பந்தை, இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்தார். 19 வது நிமிடத்தில் மீண்டும் இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு வர, இம்முறை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் வீணடித்தார்.
22வது நிமிடத்தில் லுகாஸ் மார்டினஸ் அடித்த பந்து, கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் 'ஸ்டிக்கில்' பட்டு, உள்ளே சென்று கோலாக மாற, முதல் பாதியில் இந்திய அணி 0-1 என பின்தங்கியது.
37 வது நிமிடம் அர்ஜென்டினா அணிக்கு 'பெனால்டி ஸ்டிரோக்' கிடைத்தது. இந்த வாய்ப்பை மைசியோ கேசெல்லா, கோல் போஸ்டுக்கு வெளியே அடித்து வீணடிக்க, இந்திய ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர்.
போட்டியின் 59 வது நிமிடத்தில் இந்திய அணிக்கு 'பெனால்டி கார்னர்' கிடைத்தது. ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்றினார். முடிவில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது.