sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

வினேஷ் வேதனை தீர்ந்திடுமா * ஒலிம்பிக் மல்யுத்தத்தில் சோகம்

/

வினேஷ் வேதனை தீர்ந்திடுமா * ஒலிம்பிக் மல்யுத்தத்தில் சோகம்

வினேஷ் வேதனை தீர்ந்திடுமா * ஒலிம்பிக் மல்யுத்தத்தில் சோகம்

வினேஷ் வேதனை தீர்ந்திடுமா * ஒலிம்பிக் மல்யுத்தத்தில் சோகம்


ADDED : ஆக 08, 2024 12:07 AM

Google News

ADDED : ஆக 08, 2024 12:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் களமிறங்கினார். கடினமான போட்டியாளர்கள் கொண்ட பிரிவில் இவர் இடம் பெற, ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு அவ்வளவு தான் என கூறப்பட்டது. ஆனால், 'ரவுண்டு-16' சுற்றில் (முதல்), 82 சர்வதேச போட்டிகளில் ஒன்றில் கூட தோற்காத, 4 முறை உலக சாம்பியன், நடப்பு ஒலிம்பிக் சாம்பியன், ஜப்பானின் சுசாகியை சாய்த்தார்.

அடுத்து காலிறுதியில் ஐரோப்பிய சாம்பியன், உக்ரைனின் ஆக்சனா லிவாச்சை வீழ்த்தினார். அரையிறுதியில் கியூபாவின் லோபசை வென்று, பைனலுக்கு முன்னேறினார். இதில் அமெரிக்காவின் சாரா அனுடன் மோத காத்திருந்தார்.

நேற்று பைனலுக்கு முன் இவரது எடை அளவு பார்க்கப்பட்டது. இதில் 50 கிலோவுக்கும் அதிகமாக 100 கிராம் உள்ளதாக தெரிவித்து, போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அப்பீல் செய்யக் கூட அனுமதி தரப்படவில்லை. இதையடுத்து வினேஷ் போகத்துக்கு கடைசி இடம் வழங்கப்பட்டது.

இதனால், அரையிறுதியில் வினேஷ் போகத்திடம் தோற்ற லோபஸ், பைனலில் சாராவுடன் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டது. தவிர, வெண்கலப் பதக்க போட்டியில் ஜப்பானின் சுசாகி-உக்ரைனின் ஆக்சனா மோதுவர் என தெரிவிக்கப்பட்டது.

கைக்கு எட்டியது...

வினேஷ் போகத், உலக சாம்பியன்ஷிப்பில் 2 வெண்கலம், ஆசிய விளையாட்டில் 1 தங்கம் (2018), 1 வெண்கலம் (2014), காமன்வெல்த்தில் 'ஹாட்ரிக்' தங்கம் (2014-22) வென்றிருந்தார். 2016 ரியோ ஒலிம்பிக் காலிறுதியில், முழங்கால் காயம் ஏற்பட, பாதியில் வெளியேறினார்.

2021 டோக்கியோ ஒலிம்பிக் காலிறுதியில் தோற்று திரும்பினார். இம்முறை பைனலுக்கு சென்ற வினேஷ் போகத், முதன் முறையாக ஒலிம்பிக் பதக்கம் பெற இருந்தார். கடைசியில் பதக்கம் மீண்டும் நழுவியது.

முதல் வீராங்கனை

ஒலிம்பிக் அரங்கில் அதிக எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் மல்யுத்த வீராங்கனை ஆனார் இந்தியாவின் வினேஷ் போகத். முன்னதாக பிரீஸ்டைல் பிரிவில் 8, கிரிகோ ரோமன் பிரிவில் 5 வீரர்கள் இதுபோல தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

போராட்டம்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சிங் மீதான பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சக வீராங்கனை சாக் சி மாலிக், வீரர் பஜ்ரங் புனியாவுடன் இணைந்து போராட்டம் நடத்தியவர் வினேஷ் போகத்.

இதில் இருந்து மீண்டு, மல்யுத்த தகுதி போட்டியில் பங்கேற்று அசத்தி, ஒலிம்பிக் சென்றார். தவிர, 'என்னை ஒலிம்பிக்கில் பங்கேற்கவிடாமல் செய்ய சதி நடப்பதாக,' தெரிவித்து இருந்தார்.

ஒரே இரவில் குறையுமா எடை

உடல் எடை தொடர்புடைய போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் தங்களது எடையை, சீரான அளவில் பராமரிப்பது மிகவும் கடினம்.

நாள் முழுவதும் பட்டினி கிடப்பது, தண்ணீர் கூட குடிக்காமல், எச்சில் விழுங்காமல் என பல வலி தரும் வேதனைகளை கடக்க வேண்டும்.

இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கூறுகையில்,'' எடையை குறைக்கும் போது, சில நேரங்களில் எதுவும் வயிற்றுக்குள் செல்லக் கூடாது. இதனால் அடிக்கடி நான் எச்சிலை உமிழ்வேன். கடும் பயிற்சியை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது,'' என்றார்.

4 மணி நேரத்தில்...

6 முறை உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் கூறியது:

கடந்த 2018ல் போலந்து தொடரில் பங்கேற்க அதிகாலை 3:30 மணிக்கு அங்கு சென்றேன். 7:30 மணிக்கு எடை சோதனை. அப்போது எனது எடை 48 கிலோவுக்கும் அதிகமாக 2 கிலோ இருந்தது. 4 மணி நேரத்தில் குறைக்கவில்லை என்றால், தகுதி நீக்கம் செய்துவிடுவர். இதையடுத்து மணிக்கணக்கில் 'ஸ்கிப்பிங்' செய்து எடையை குறைத்து, பின் போட்டியில் பங்கேற்றேன்.



இதற்கு முன்...

அதிக எடை காரணமாக வினேஷ் போகத், இதற்கு முன் ஒருமுறை இதுபோல தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன் நடந்த ஒரு தொடரில் 400 கிராம் அதிகம் இருந்ததால் வெளியேற்றப்பட்டார்.

கூடியது எப்படி

வினேஷ் போகத் வழக்கமாக 53 கிலோ போட்டியில் பங்கேற்பார். இதனால் இவரது உடல் எடை எப்போதும் 55 முதல் 56 கிலோ இருக்கும். போட்டி நேரத்தில் 3 கிலோ குறைத்தால் போதும்.

தற்போது 50 கிலோ பிரிவில் பங்கேற்றார். இதனால் 6 எடையை குறைக்க வேண்டும். ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் இது கடின வேலையாக இருந்தது.

பாரிசில் முதல் நாள் 50 கிலோ எடையுடன் களமிறங்கினார். தலா 6 நிமிடம் கொண்ட, 3 போட்டியில் பங்கேற்றார். 18 நிமிடம் விளையாடிய இவருக்கு அதிகமான ஊட்டச்சத்து தேவைப்பட்டுள்ளது. இதனால் திடீரென எடை அதிகரித்தது. கடைசி நேரத்தில் 100 கிராம் அதிகமாக பதக்கம் பறிபோனது.

15 நிமிடம்

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் முதல் நாள், மல்யுத்த ஆடையுடன், 30 நிமிட இடைவெளியில் எடை அளக்கப்படும். மறுநாள் பதக்க சுற்றில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு 15 நிமிடம் மட்டும் இடைவெளி தரப்படும். இதற்குள் கூடுதல் எடை குறைக்கப்பட வேண்டும். இல்லை எனில் தகுதி நீக்கம் செய்யப்படுவர். இது தான் வினேஷ் போகத்துக்கு நடந்தது.

கிடைத்திருக்குமா வெள்ளி

முதல் நாள் காயம் ஏற்பட்டது என தெரிவித்து பைனலுக்கு முன், விலகுவதாக தெரிவித்து இருந்தால் வினேஷிற்கு வெள்ளி கிடைத்திருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் காயம் இருந்தாலும், மறுநாள் காலையில் மருத்துவ பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும் என்பதால், இது முடியாமல் போனது.

'தங்கல்' சகோதரிகள்

ஹரியானாவை சேர்ந்தவர் முன்னாள் மல்யுத்த வீரர் மஹாவீர் சிங் போகத். இவருக்கு 4 மகள் (கீதா, பபிதா, ரீத்து, சங்கீதா), 1 மகன். மஹாவீர் சகோதரர் ராஜ்பால் மகள் பிரியங்கா, வினேஷ்.

இந்த ஆறு சகோதரிகளுக்கும் பயிற்சி தந்து, சர்வதேச அரங்கில் 'போகத்' வீராங்கனைகளாக வளர்த்தார். இவர்களை, இந்தியாவின் 'தங்கல்' சகோதரிகள் என அழைத்தனர். இவர்களது வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான பாலிவுட் படம் 'தங்கல்' வசூலில் சாதனை படைத்தது.






      Dinamalar
      Follow us