ADDED : பிப் 28, 2026 11:04 PM

மெரிடா: மெக்சிகோவில், டபிள்யு.டி.ஏ., மெரிடா ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இத்தாலியின் ஜாஸ்மின் பாவோலினி, பிரிட்டனின் கேட்டி போல்டர் மோதினர். இதில் பாவோலினி 0-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சா 6-3, 6-4 என, துருக்கியின் ஜெய்னெப் சோன்மெசை வீழ்த்தினார்.
லெவான்டோ வெற்றி
மாட்ரிட்: ஸ்பெயினில், 'லா லிகா' கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் லெவான்டே, டெபோர்டிவோ அலவேஸ் அணிகள் மோதின. கார்லஸ் எஸ்பி 2 கோல் அடித்து கைகொடுக்க லெவான்டே அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. லெவான்டே அணி இதுவரை விளையாடிய 26 போட்டியில், 5 வெற்றி, 6 'டிரா', 15 தோல்வி என 21 புள்ளிகளுடன் 19வது இடத்தில் உள்ளது.
எக்ஸ்டிராஸ்
* மங்கோலியாவில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் (மார்ச் 28 - ஏப். 11) நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணியில் லவ்லினா, நிகாத் ஜரீன், பிரீத்தி, அருந்ததி சவுத்ரி, பூஜா ராணி, தீபக், ஆகாஷ், சச்சின் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
* ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் வைதேகி சவுத்ரி 6-2, 1-6, 6-2 என, ஜப்பான் வீராங்கனை மியோ முஷிகாவை வீழ்த்தினார்.
* ஹரியானாவின் குருகிராமில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீராங்கனை ஜீல் தேசாய் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் எகடரினா யாஷினாவை வீழ்த்தினார்.
* ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 21வது சீசன் இன்று துவங்குகிறது. இந்திய அணி 'பி' பிரிவில் வியட்நாம் (மார்ச் 4), ஜப்பான் (மார்ச் 7), சீனதைபே (மார்ச் 10) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

