/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பாராலிம்பிக் நட்சத்திரங்களுக்கு பாராட்டு * பிரதமர் மோடி பெருமிதம்
/
பாராலிம்பிக் நட்சத்திரங்களுக்கு பாராட்டு * பிரதமர் மோடி பெருமிதம்
பாராலிம்பிக் நட்சத்திரங்களுக்கு பாராட்டு * பிரதமர் மோடி பெருமிதம்
பாராலிம்பிக் நட்சத்திரங்களுக்கு பாராட்டு * பிரதமர் மோடி பெருமிதம்
ADDED : செப் 13, 2024 11:24 PM

புதுடில்லி: ''பாராலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்டு, தேசத்தை பெருமைப்படுத்திய வீரர் வீராங்கனைகளுக்கு பாராட்டுகள்,'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாரிசில் பாராலிம்பிக் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் 84 பேர் களமிறங்கினர். எப்போதும் இல்லாத வகையில் 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் இந்தியா 29 பதக்கம் வென்றது.
இதனிடையே பாராலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். அவர்களது அனுபவங்களை கேட்டு அறிந்தார். துப்பாக்கிசுடுதல் வீராங்கனை அவனி லெஹரா, வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி, தங்களது கையெழுத்திட்ட 'ஜெர்சியை' பிரதமரிடம் வழங்கினர். ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற ஹர்விந்தர் சிங், அம்பை பரிசாக வழங்கினார்.
பிரதமர் மோடி கூறியது:
பாராலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்டு, தேசத்தை பெருமைப்படுத்திய உங்களுக்கு வாழ்த்துகள். உடல்ரீதியில் பல சிரமங்கள் இருந்தாலும், கடவுள் உங்களுக்கு கூடுதல் திறமை கொடுத்துள்ளார். வெற்றி அல்லது தோல்வி குறித்து நீங்கள் பயப்படவில்லை. இது தான் உங்களது மிகப்பெரிய பலம்.
மாற்ற வேண்டும்
உங்கள் மூலம் நமது நாட்டில் புதிய கலாசாரத்தை கொண்டு வர வேண்டும். மக்கள் உங்களை பார்க்கும் பார்வையை மாற்ற வேண்டும் என விரும்புகிறேன். தற்போது இதற்கான புதிய சூழல் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு பதக்கம் ஒரு பொருட்டல்ல, நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளீர்கள்.
இதனால் மக்களின் கண்ணோட்டம் மாறிவிட்டது. சமுதாயத்தில் உங்களது பங்களிப்பு பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. பாரா நட்சத்திரங்களின் பயிற்சியாளர்களுக்கு வியக்கத்தக்க திறமை தேவை. ஏனெனில் வழக்கமான வீரர், வீராங்கனைகளுக்கு, போட்டியில் எப்படி செயல்பட வேண்டும் என தெரிவித்தால் மட்டும் போதும்.
ஆனால் பாரா நட்சத்திரங்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கான வாழ்க்கை முறையையும் கற்றுத் தர வேண்டும். இதேபோல, இவர்களுடன் இணைந்து செயல்படுவது உதவி பணியாளர்களுக்கு உண்மையில் சிரமமான விஷயம் தான். அர்ப்பணிப்பு உணர்வுடன் இருந்தால் தான் பாரா நட்சத்திரங்களுக்கு உதவ முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எங்களது நண்பர்
பாராலிம்பிக் வட்டு எறிதலில் இரண்டாவது முறையாக வெள்ளி வென்ற யோகேஷ் கூறுகையில்,'' தொடர்ந்து நாங்கள் சிறப்பாக செயல்பட நீங்கள் தான் காரணம். எல்லோருக்கும் 'பி.எம்' என்றால் 'பிரைம் மினிஸ்டர்' (பிரதமர்) என்று தான் அர்த்தம். எங்களைப் பொறுத்தவரையில் நீங்கள் எங்களது 'பரம் மித்ரா' (சிறந்த நண்பர்),'' என்றார்.
அப்போது பிரதமர் மோடி கூறுகையில்,'இதை நினைத்து பெருமைப்படுகிறேன். உங்களுடன் நண்பராக இணைந்து செயல்பட விரும்புகிறேன்,'' என்றார்.
உங்களுக்கான தங்கம்
ஈட்டி எறிதலில் தொடர்ந்து இரு தங்கம் வென்ற சுமித் அன்டில் கூறுகையில்,'' கடந்த 2021ல் டோக்கியோவில் இருந்து திரும்பிய போது, இதுபோல இன்னும் இரண்டு தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என என்னிடம் தெரிவித்தீர்கள். தற்போது பாரிசில் வென்ற இரண்டாவது தங்கப்பதக்கம் உங்களுக்கானது,'' என்றார்.
பதட்டம் தந்த பதக்கம்
ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நவ்தீப் சிங் கூறுகையில்,'' சக வீரர், வீராங்கனைகள் ஒவ்வொருவராக பதக்கம் வெல்ல, எனக்கு பதட்டம் அதிகரித்தது. ஏனெனில் எனது போட்டி கடைசியாக இருந்தது. இருப்பினும், அவர்கள் பதக்கம் வென்ற அனுபவத்தை தெரிவித்தது, எனக்கு ஊக்கமாக அமைந்தது. இதுவே நான் பதக்கம் வெல்ல காரணமாக இருந்தது,'' என்றார்.