/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வில்வித்தையில் சாதிக்குமா இந்தியா * பாராலிம்பிக்கில் எதிர்பார்ப்பு
/
வில்வித்தையில் சாதிக்குமா இந்தியா * பாராலிம்பிக்கில் எதிர்பார்ப்பு
வில்வித்தையில் சாதிக்குமா இந்தியா * பாராலிம்பிக்கில் எதிர்பார்ப்பு
வில்வித்தையில் சாதிக்குமா இந்தியா * பாராலிம்பிக்கில் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 28, 2024 11:14 PM

பாரிஸ்: பாராலிம்பிக்கில் இன்று வில்வித்தை போட்டி துவங்குகின்றன. இந்தியா சார்பில் ஷீத்தல் தேவி, ஹர்விந்தர் சிங் உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நேற்று துவங்கியது. -செப். 8ல் வரை நடக்கும் இதில் 169 நாடுகளை சேர்ந்த 4,400 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 84 பேர், 12 வகையான போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். இதில் இன்று வில்வித்தை தரவரிசை போட்டிகள் துவங்குகின்றனர்.
கடந்த 1960ல் பாராலிம்பிக் துவங்கியது முதல் வில்வித்தை போட்டி இடம் பெற்று வருகிறது. இதுவரை பிரிட்டன் அதிகபட்சம் 68 பதக்கம் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. அடுத்த இரு இடத்தில் அமெரிக்கா (44), தென் கொரியா (42) அணிகள் உள்ளன. ஆனால் கடந்த டோக்கியோ (2021) பாராலிம்பிக்கில் சீனா, 8 பதக்கங்களை கைப்பற்றியது. இம்முறை மொத்தம் 9 பிரிவுகளில் பதக்கம் வழங்கப்பட உள்ளன.
இந்தியா எப்படி
இந்திய வில்வித்தை அணி, கடந்த 1968, இஸ்ரேல் பாராலிம்பிக்கில் முதன் முறையாக களமிறங்கியது. இதுவரை 4 முறை மட்டும் தான் வில்வித்தை போட்டியில் பங்கேற்றது. கடைசியாக டோக்கியோவில் (2021), ஹர்விந்தர் சிங் ('ரீகர்வ்') இந்தியாவுக்கு முதல் பதக்கம் (வெண்கலம்) வென்று தந்தார்.
இம்முறை இந்தியா சார்பில் காம்பவுண்டு பிரிவில் ஷீத்தல் தேவி, சரிதா, சுந்தர் சுவாமி, ராகேஷ் குமார் என நான்கு பேர், 'ரீகர்வ்' பிரிவில் ஹர்விந்தர் சிங், பூஜா ஜத்யன் என மொத்தம் 6 பேர் பங்கேற்கின்றனர். இன்று இரண்டு பிரிவிலும் தரவரிசை போட்டி நடக்கின்றன.
இதில் காம்பவுண்டு பிரிவை பொறுத்தவரையில் இந்தியா கடந்த மூன்று ஆண்டில் வியக்கத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது. 2023ல் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா மூன்று பதக்கம் கைப்பற்றியது. தவிர ஷீத்தல் தேவி, ராகேஷ் குமார் இடம் பெற்ற கலப்பு அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிக்குப் பின் இந்திய ஜோடி, பங்கேற்ற 6 சர்வதேச தொடரிலும் 4 தங்கம் உட்பட 6 பதக்கம் வென்றுள்ளது. இளம் வீராங்கனை ஷீத்தல் தேவி, தனிநபர் பிரிவில் பதக்கம் வென்று தருவார் என நம்பப்படுகிறது. இவர் களமிறங்கிய உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றுள்ளார். இது பாராலிம்பிக்கிலும் தொடரலாம்.
10 பதக்கம்
பாராலிம்பிக் இந்திய தடகள பயிற்சியாளர் சத்யநாராயணா கூறுகையில்,'' டோக்கியோ தடகளத்தில் நமது நட்சத்திரங்கள் பலர் வெள்ளி, வெண்கலம் வென்றனர். இம்முறை தங்கம் வெல்ல முயற்சிப்போம். இதற்காக கடின பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பலர் முன்னதாக பாரிஸ் சென்று, சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றி, பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எப்படியும் 5 தங்கம் உட்பட 10 பதக்கம் வெல்ல முடியும் என நம்புகிறோம்,'' என்றார்.

