/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'ஈட்டி'... தங்கக்கட்டி சிங்கக்குட்டி அன்டில் * * பாராலிம்பிக்கில் சாதிக்க தயார்
/
'ஈட்டி'... தங்கக்கட்டி சிங்கக்குட்டி அன்டில் * * பாராலிம்பிக்கில் சாதிக்க தயார்
'ஈட்டி'... தங்கக்கட்டி சிங்கக்குட்டி அன்டில் * * பாராலிம்பிக்கில் சாதிக்க தயார்
'ஈட்டி'... தங்கக்கட்டி சிங்கக்குட்டி அன்டில் * * பாராலிம்பிக்கில் சாதிக்க தயார்
ADDED : ஆக 19, 2024 11:24 PM

புதுடில்லி: ''பாரிஸ் பாராலிம்பிக் ஈட்டி எறிதலில், உலக சாதனையுடன் தங்கம் வெல்வதே இலக்கு,''என சுமித் அன்டில் தெரிவித்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் (ஆக. 28-செப். 8) நடக்க உள்ளது. இந்தியா சார்பில் 84 நட்சத்திரங்கள் 12 வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர். துவக்க விழா அணிவகுப்பில் இந்திய மூவர்ணக்கொடியை சுமித் அன்டில், பாக்யஸ்ரீ ஜாதவ் (குண்டு எறிதல், எப் 34 பிரிவு) ஏந்தி வர உள்ளனர். ஈட்டி எறிதலில் (எப் 64 பிரிவு) சுமித் அன்டில், மீண்டும் தங்கம் வெல்லலாம்.
'பைக்' விபத்து
ஹரியானாவை சேர்ந்தவர் சுமித் அன்டில், 26. இளம் பருவத்தில் மல்யுத்தம், இந்திய ராணுவத்தில் சேர விரும்பினார். இவரது 17வது வயதில் விதி விளையாடியது. 'டியூஷன்' முடித்து பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தவர் மீது வேகமாக வந்த 'டிரக்' மோதியது. விபத்தில் காயமடைந்த இவரது இடது காலின் கீழ் பகுதி அகற்றப்பட, மல்யுத்த கனவு தகர்ந்தது. பின் மனம் தளராமல் பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் களமிறங்கினார். விரைவில் சர்வதேச போட்டிகளில் ஜொலிக்க துவங்கினார். தங்கப்பதக்கங்களை குவித்தார்.
கடந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் (2021) 68.55 மீ., துாரம் எறிந்து உலக சாதனையுடன் தங்கம் வென்றார். 2023ல் ஹாங்சுவில் நடந்த பாரா ஆசிய விளையாட்டில் 73.29 மீ., எறிந்து புதிய உலக சாதனையுடன் தங்கம் கைப்பற்றினார். பாரிஸ் பாராலிம்பிக்கிலும் சாதிக்க காத்திருக்கிறார்.
சுமித் அன்டில் கூறியது:
ஈட்டி எறியும் 'ஸ்டைலை' மாற்றாமல் அதிக துாரம் எறிந்து சாதிக்க விரும்புகிறேன். நீண்ட நாள் கனவு 80 மீ., துாரம் எறிவது தான். பாரிஸ் பாராலிம்பிக்கில் குறைந்தபட்சம் 75 மீ., துாரம் எறிந்து, உலக சாதனையுடன் தங்கம் வெல்ல முயற்சிப்பேன். பாராலிம்பிக்கில் நடப்பு சாம்பியனாக களமிறங்குவதால், நெருக்கடியை உணரவில்லை. பாராலிம்பிக் கிராமத்தை சென்றடையும் போது சூழ்நிலை மாறலாம்.
பாரிஸ் பாராலிம்பிக்கில் சாதிக்க, அதிக நேரம் பயிற்சியில் செலவிட்டுள்ளேன். இந்தியாவில் பயிற்சி மேற்கொள்வது தான் பிடிக்கும். 2018ல் பின்லாந்து சென்றேன். அங்கு எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கவில்லை. இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் சோனிபட்டில் உள்ள பயிற்சி மையத்தில், உலகத் தரம் வாய்ந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு தான் பயிற்சி எடுக்கிறேன்.
நீரஜ் கனவு இலக்கு
சமீபத்திய பாரிஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா சிறப்பாக செயல்பட்டு வெள்ளி வென்றார். அன்று நமது நாளாக அமையவில்லை. தங்கம் வென்ற பாகிஸ்தானின் அர்ஷத் நதீமிற்கு சிறந்த நாளாக அமைந்தது. 90 மீ., என்ற கனவு இலக்கை நீரஜ் எட்டி விட்டால், நமக்கு நிறைய தங்கப்பதக்கங்கள் கிடைக்கும்.
கடந்த 2019ல் மத்திய அரசின் ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டத்தில் சேர்க்கப்பட்டேன். செயற்கை கால் இறக்குமதி உட்பட எனக்கு தேவையான அனைத்து உதவியும் கிடைக்கிறது.
இவ்வாறு சுமித் அன்டில் கூறினார்.
முதல் முறை
சுமித் அன்டில் கூறுகையில்,''பாராலிம்பிக் துவக்க விழாவில் முதல் முறையாக பங்கேற்க உள்ளேன். கடந்த டோக்கியோ பாராலிம்பிக் போட்டிக்கு (2021) கொரோனா கட்டுப்பாடு காரணமாக தாமதமாக சென்றேன். இதனால் துவக்க விழாவை 'மிஸ்' செய்தேன். இம்முறை இந்திய கொடியை ஏந்தி செல்ல இருப்பதை பெரிய கவுரவமாக கருதுகிறேன்,''என்றார்.
மாரியப்பன் நம்பிக்கை
பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் (ரியோ, 2016), வெள்ளி (டோக்கியோ, 2021) என இரு பதக்கம் வென்றவர் தமிழகத்தின் மாரியப்பன். சமீபத்தில் நடந்த பாரா உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் கைப்பற்றினார். தற்போது மூன்றாவது முறையாக பாரிசில் களமிறங்கும் மாரியப்பன், பாராலிம்பிக்கில் 'ஹாட்ரிக்' பதக்கம் வெல்லலாம்.
பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பெரன்சிங் மூலம் பாரிஸ் பாராலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மோடி கூறுகையில்,'' பாரிசில் நீங்கள் சாதிப்பதால், நமது ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்ளும். நீங்கள் வெற்றி பெற வேண்டும் என, 140 கோடி இந்தியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாரா ஆசிய விளையாட்டு, டோக்கியோ பாராலிம்பிக் போல, பாரிசிலும் சிறப்பாக செயல்பட்டு, வரலாறு படைக்க வாழ்த்துகிறேன்,'' என்றார்.
அப்போது மாரியப்பன் கூறுகையில்,'' முதன் முதலில் பாராலிம்பிக்கில் பங்கேற்ற போது ஒருவித தயக்கம் இருந்தது. இரண்டு பதக்கம் வென்றபின், தடை உடைந்தது. தற்போது ஜெர்மனியில் பயிற்சி செய்கிறேன். பாரிசில் எப்படிம் தங்கம் வெல்வேன்,'' என்றார்.