/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பாராலிம்பிக்: இந்தியாவுக்கு இரண்டு தங்கம் * பாட்மின்டனில் நிதேஷ், ஈட்டி எறிதலில் சுமித் அபாரம்
/
பாராலிம்பிக்: இந்தியாவுக்கு இரண்டு தங்கம் * பாட்மின்டனில் நிதேஷ், ஈட்டி எறிதலில் சுமித் அபாரம்
பாராலிம்பிக்: இந்தியாவுக்கு இரண்டு தங்கம் * பாட்மின்டனில் நிதேஷ், ஈட்டி எறிதலில் சுமித் அபாரம்
பாராலிம்பிக்: இந்தியாவுக்கு இரண்டு தங்கம் * பாட்மின்டனில் நிதேஷ், ஈட்டி எறிதலில் சுமித் அபாரம்
UPDATED : செப் 04, 2024 04:51 PM
ADDED : செப் 03, 2024 12:34 AM

பாரிஸ்: பாராலிம்பிக்கில் நேற்று இந்தியாவுக்கு ஒரே நாளில் 2 தங்கம் கிடைத்தது. பாட்மின்டனில் நிதேஷ் குமார், ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் அசத்தினர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. பாட்மின்டன் ஒற்றையர் (எஸ்.எல்.3) பைனலில் 'நம்பர்-1' வீரரான நிதேஷ் குமார், பெத்தேல் டெனியலை (நம்பர்-2) சந்தித்தார். முதல் செட்டை நிதேஷ் 21-14 என எளிதாக வென்றார்.
அடுத்த செட்டை 18-21 என கோட்டை விட்டார். மூன்றாவது செட்டில் ஒரு கட்டத்தில் 20-21 என பின் தங்கினார். பின் அடுத்தடுத்து 2 புள்ளி எடுத்த நிதேஷ், 23-21 என கைப்பற்றினார். முடிவில் நிதேஷ் 21-14, 18-21, 23-21 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
சுமித் அபாரம்
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (எப்.64) போட்டியில் இந்தியாவின் சுமித் அன்டில், சந்திப், சஞ்சய் களமிறங்கினர். இரண்டாவது வாய்ப்பில் அதிகபட்சம் 70.59 மீ., துாரம் எறிந்த சுமித், முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். ஏற்கனவே இவர், டோக்கியோ பாராலிம்பிக்கிலும் தங்கம் வென்றிருந்தார்.
தவிர, பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 3வது தங்கம் ஆனது இது. முன்னதாக துப்பாக்கிசுடுதலில் அவனி லெஹரா, தங்கம் கைப்பற்றி இருந்தார். இந்தியாவின் மற்ற வீரர்கள் சந்திப் (62.80), சஞ்சய் (58.03) 4, 7வது இடம் பிடித்தனர்.
துளசிமதி 'வெள்ளி'
பெண்களுக்கான எஸ்.யு.,5 பிரிவு ஒற்றையர் பைனலில் தமிழகத்தின் துளசிமதி முருகேசன், சீனாவின் குயு ஜியாவை சந்தித்தார். இதில் துளசிமதி 17-21, 10-21 என்ற கணக்கில் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
இதே பிரிவில் நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் மணிஷா ராமதாஸ், 21-12, 21-8 என நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
சபாஷ் யோகேஷ்
ஆண்களுக்கான வட்டு எறிதல் பைனல் நேற்று நடந்தது. இந்திய வீரர் யோகேஷ் கதுனியா, முதல் வாய்ப்பில் 42.22 மீ., துாரம் எறிந்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். ஏற்கனவே, டோக்கியோ பாராலிம்பிக்கில் (2021) யோகேஷ் வெள்ளி வென்று இருந்தார்.
சுஹாஸ் 'வெள்ளி'
ஆண்கள் ஒற்றையர் பாட்மின்டன் பைனலில் (எஸ்.எல்.4) இந்தியாவின் சுஹாஸ் யத்திராஜ், 9-21, 13-21 என பிரான்சின் லுகாசிடம் தோற்று, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
இந்திய ஜோடி வெண்கலம்
வில்வித்தை கலப்பு இரட்டையர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் ராகேஷ் குமார், ஷீத்தல் தேவி ஜோடி, இத்தாலியின் சார்டி, மட்டேவு ஜோடியை சந்தித்தது. இதில் 156-155 என 'திரில்' வெற்றி பெற்ற இந்திய ஜோடி, வெண்கலம் வசப்படுத்தியது.
சோலைமலை 'நான்கு'
பாட்மின்டன் கலப்பு இரட்டையர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் சோலைமலை சிவராஜன், சுமதி சிவன் நித்ய ஸ்ரீ ஜோடி, இந்தோனேஷியாவின் சுபன், மர்லினா ரினா ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 17-21, 12-21 என்ற நேர் செட்டில் தோற்க, நான்காவது இடம் பிடித்தது.
ஒரே நாளில் 7 பதக்கம்
பாராலிம்பிக்கில் இந்தியா நேற்று மட்டும் 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கம் வென்றது. இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கம் கைப்பற்றியுள்ளது.
கோபிசந்த் மாணவி
தமிழகத்தின் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் துளசிமதி 22. இடதுகை பாதிக்கப்பட்டவர். ஐதராபாத்தின் கோபிசந்த் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டார். பாரா ஆசிய விளையாட்டில் (2023) 3 பதக்கம் (தங்கம், வெள்ளி, வெண்கலம்) வென்றார். உலக சாம்பியன்ஷிப்பில் (2024) வெள்ளி வென்ற இவர், நேற்று மீண்டும் வெள்ளி கைப்பற்றினார்.
முதல் முறை
மணிஷா 19, தமிழகத்தின் திருவள்ளூரை சேர்ந்தவர். பிறக்கும் போது ஏற்பட்ட நரம்பு பாதிப்பு காரணமாக இவரது வலது கை பாதிக்கப்பட்டது. உலக சாம்பியன்ஷிப் ஒற்றையரில், 2022ல் தங்கம், 2024ல் வெள்ளி கைப்பற்றினார். பாராலிம்பிக்கில் முதன் முறையாக பங்கேற்று வெண்கலம் வசப்படுத்தினார்.
துப்பாக்கிசுடுதலில் ஏமாற்றம்
துப்பாக்கிசுடுதல் கலப்பு இரட்டையர் 25 மீ., பிஸ்டல் பிரிவு போட்டி நடந்தது. இதன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் நிஹால் சரின், அஹமது ஆமிர் களமிறங்கினர். இதில் நிஹால் 569, ஆமிர் 568 புள்ளி எடுக்க, 10, 11வது இடம் பிடிக்க, பைனல் வாய்ப்பை இழந்தனர்.
பதக்கம் வென்ற கர்ப்பிணி
பாராலிம்பிக் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் கர்ப்பிணி வீராங்கனை ஆனார் பிரிட்டனின் ஜோடீ கிரின்ஹாம் 31. பாரிசில் 7 மாத கர்ப்பிணியாக வில்வித்தை போட்டியில் பங்கேற்ற இவர், தனிநபர் காம்பவுண்டு பிரிவில் வெண்கலம் வென்றார்.
ஐ.ஐ.டி., படித்தவர்
ஹரியானாவை சேர்ந்தவர் நிதேஷ் குமார் 29. 2009ல் விசாகப்பட்டனத்தில் நடந்த ரயில் விபத்தில் சிக்கி, இடது காலை இழந்தார். பல மாதம் படுக்கையில் இருந்த போதும், ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுக்கு தயாரானார். 2013ல் இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஐ.ஐ.டியில் சேர்ந்தார்.
இங்கு பாட்மின்டன் விளையாடத் துவங்கினார். 2023 பாரா ஆசிய விளையாட்டில், ஆண்கள் இரட்டையரில் தங்கம், ஒற்றையரில் வெள்ளி, கலப்பு இரட்டையரில் வெண்கலம் கைப்பற்றினார். தற்போது பங்கேற்ற தனது முதல் பாராலிம்பிக்கில், தங்கம் கைப்பற்றி அசத்தினார்.
'பிசியோதெரபி' நம்பிக்கை
ஹரியானாவின் பகதுர்கரை சேர்ந்தவர் யோகேஷ் கதுனியா 27. நரம்பு பிரச்னையால் கை, கால் என நான்கு மூட்டுகளிலும் தசை பலவீனம் ஏற்பட்டது.
மகனுக்காக 'பிசியோதெரபி' படித்த அம்மா மீனா தேவி, 12 வயதில் யோகேஷின் தசைகளுக்கு மீண்டும் வலிமையை கொண்டு வந்தார். பின் வட்டு எறிதலில் இறங்கிய இவர், 45.18 மீ., துாரம் எறிந்து உலக சாதனை (2018) படைத்தார். தற்போது பாரிசில் சிறப்பாக செயல்பட, பதக்கம் கைப்பற்றினார்.
பைனலில் தீப்தி
பெண்களுக்கான 400 மீ., ஓட்டம் நடந்தது. இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி, 55.45 வினாடி நேரத்தில் ஓடி, தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறினார்.