மன அமைதியுடன் ஒலிம்பிக்... * மல்யுத்த வீராங்கனைகள் வேண்டுகோள்
மன அமைதியுடன் ஒலிம்பிக்... * மல்யுத்த வீராங்கனைகள் வேண்டுகோள்
ADDED : மே 17, 2024 10:58 PM

புதுடில்லி: 'மீண்டும் தகுதி போட்டியில் பங்கேற்குமாறு கட்டாயப்படுத்த வேண்டாம். எங்களை பாரிஸ் செல்ல விடுங்கள்,' என மல்யுத்த வீராங்கனைகள் வலியுறுத்தியுள்ளனர்.
பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி (ஜூலை 26-ஆக. 11) நடக்கவுள்ளது. இதற்கான மல்யுத்த போட்டியில் இந்தியா சார்பில் வினேஷ் போகத் (50 கிலோ), அன்டிம் பங்கல் (53 கிலோ), அன்ஷு மாலிக் (57 கிலோ), நிஷா தாஹியா (68 கிலோ), ரீத்திகா (76 கிலோ) என 5 வீராங்கனைகள், அமன் ஷெராவத் (57 கிலோ) என மொத்தம் 6 பேர் தகுதி பெற்றனர்.
உலகளவில் நடந்த பல்வேறு தொடர்களில் திறமை வெளிப்படுத்திய இவர்கள், மீண்டும் தகுதி போட்டியில் பங்கேற்க வேண்டும் என இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தெரிவித்துள்ளது.
இதன் படி, ஒவ்வொரு பிரிவிலும் இந்திய அளவில் 'டாப்-4' இடம் பெற்றவர்கள் மோதுவர். இதில் வெல்பவர், ஏற்கனவே ஒலிம்பிக் தகுதி பெற்றவரிடம் மோத வேண்டும். இதன் வெற்றியாளர் பாரிஸ் செல்வார். இதுகுறித்த இறுதி முடிவு மே 21ல் எடுக்கப்பட உள்ளது.
டபிள்யு.எப்.ஐ.,ன் இச்செயலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் கூறுகையில்,''சர்வதேச தொடர்கள், தேசிய போட்டிகள், தகுதி முகாம் என சமீபத்தில் பல்வேறு தொடர்களில் பங்கேற்றுள்ளேன். எனது பிட்னசை மீண்டும் தகுதி போட்டி வழியாக முடிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒலிம்பிக் செல்ல இன்னும் இரு மாதம் மட்டும் தான் உள்ளன. இதற்கு முன் எங்களுக்கு மன அமைதி தேவைப்படுகிறது. தகுதி போட்டியில் அழைப்பதால் எங்களது பயிற்சி திட்டம், பதக்க வாய்ப்பில் பாதிப்பு ஏற்படும்,'' என்றார்.
காயம் ஏற்பட்டால்...
பயிற்சியாளர் ஒருவர் கூறுகையில்,''ஒலிம்பிக் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டியில் கடுமையாக மோதுவர். ஒலிம்பிக் நட்சத்திரங்கள் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சூழலை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.
பர்வீனுக்கு தடை
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடா. 2022, ஏப்.,-2023 மார்ச் என 12 மாத இடைவெளியில் உலக ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் சோதனையை, 3 முறை தவிர்த்துள்ளார். இது விதிமீறிய செயல் என்பதால் ஒன்றரை ஆண்டு தடை (2025, நவம்பர் வரை) விதிக்கப்பட்டது. இதனால் பர்வீன் ஒலிம்பிக் செல்ல முடியாது.
