பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம்: ஹர்மன்பிரீத் சிங் நம்பிக்கை
பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம்: ஹர்மன்பிரீத் சிங் நம்பிக்கை
ADDED : ஏப் 17, 2024 10:43 PM

புதுடில்லி: ''பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முயற்சிப்போம்,'' என இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், வரும் ஜூலை 26 முதல் ஆக. 11 வரை ஒலிம்பிக் 33வது சீசன் நடக்க உள்ளது. கடந்த ஆண்டு சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. இதற்கு தயாராகும் விதமாக சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி 0-5 என 'ஒயிட்வாஷ்' ஆனது.
இதுகுறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கூறுகையில், ''ஆஸ்திரேலிய தொடரில் எங்களது செயல்பாடு ஏமாற்றம் அளித்தது. சிறிது ஓய்வுக்கு பின் விரைவில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சியை துவக்க உள்ளோம். ஒலிம்பிக் துவங்க இன்னும் 100 நாட்கள் மட்டும் இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பயிற்சியாளர் கிரெய்க் புல்டன் பயிற்சியின் கீழ் வீரர்களின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வென்ற வெண்கலப் பதக்கத்தை இம்முறை தங்கமாக மாற்றுவதே இலக்கு. இதற்காக கடுமையாக போராடுவோம்,'' என்றார்.
