/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பாரிஸ் ஒலிம்பிக் கோலாகல துவக்கம்: விளையாட்டு நட்சத்திரங்கள் உற்சாகம்
/
பாரிஸ் ஒலிம்பிக் கோலாகல துவக்கம்: விளையாட்டு நட்சத்திரங்கள் உற்சாகம்
பாரிஸ் ஒலிம்பிக் கோலாகல துவக்கம்: விளையாட்டு நட்சத்திரங்கள் உற்சாகம்
பாரிஸ் ஒலிம்பிக் கோலாகல துவக்கம்: விளையாட்டு நட்சத்திரங்கள் உற்சாகம்
ADDED : ஜூலை 27, 2024 12:30 AM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நேற்று கோலாகலமாக துவங்கியது. அணிவகுப்பில்இந்திய மூவர்ணக்கொடியை பாட்மின்டன் வீராங்கனை சிந்து, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் ஏந்தி வந்தனர்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா நடக்கும். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக துவக்க விழா மைதானத்தில் நடக்கவில்லை. மாறாக, பாரிசின் சென் நதியில் 6 கி.மீ., துாரத்திற்கு புதுமையான முறையில் நடந்தது. ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் இருந்து துவங்கியது. நதியில்100 படகுகளில் 205 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் வந்தனர். பாப் பாடகர்களான செலின் டியான், லேடி ககா, டைலா லாரா அசத்தினர். அழகிய பாரிஸ் நகரில் உள்ள 'ஈபிள் டவர்' உள்ளிட்ட பாரம்பரிய இடங்கள் வண்ண ஒளியில் ஜொலித்தன. நதியின் இருபுறமும் திரண்ட 3 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள், விழாவை கண்டு களித்தனர்.
அணிவகுப்பு:பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 117 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இருப்பினும் 78 பேர் மட்டுமே துவக்க விழா அணிவகுப்பில் பங்கேற்றனர். சிலருக்கு அடுத்த நாள் போட்டி இருந்ததால், அணிவகுப்பை தவிர்த்தனர். இன்று இந்திய ஹாக்கி அணியினர், நியூசிலாந்தை எதிர்கொள்கின்றனர். இதனால் 3 'ரிசர்வ்' வீரர்கள் மட்டும் பங்கேற்றனர். இந்திய மூவர்ணக்கொடியை சிந்து, சரத் கமல் ஏந்தி வந்தனர். தீபிகா குமாரி (வில்வித்தை), லவ்லினா (குத்துச்சண்டை), மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), ரோகன் போபண்ணா (டென்னிஸ்) உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். சுமார் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மழை, கிளர்ச்சியாளர்களால் ரயில் போக்குவரத்து பாதிப்பு போன்ற பிரச்னைகளை கடந்து ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு துவக்க விழா இனிதே நடந்து முடிந்தது.
எத்தனை கனவு 58 வயதினிலே
நம்மூர்ல 58 வயசான நடக்கவே தடுமாறுவர். ஒலிம்பிக் டேபிள் டென்னிசில் பங்கேற்கும் ஜெங் சியாங், தள்ளாத வயதிலும் தளராமல் விளையாடுகிறார். தனது வாழ்க்தை 'பிளாஷ் பேக்' பற்றி ஜெங் கூறுகையில்,''35 ஆண்டுகள் பின்னே செல்ல வேண்டும். பிறந்தது சீனாவில். டேபிள் டென்னிஸ் பயிற்சியாளரான அம்மாவிடம் இருந்து ஆட்ட நுணுக்கங்களை கற்றேன். 1989ல் சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் பெரும் போராட்டம் நடந்தது. அந்த ஆண்டு சீனாவைவிட்டு வெளியேறி சிலிக்கு சென்றேன். அங்கு பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு ஆசிரியராக பணியாற்றினேன்.
டேபிள் டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று, குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டேன். கொரோனா காலத்தில் பொழுதுபோக்கிற்காக மீண்டும் விளையாட துவங்கினேன். கடந்த ஆண்டு சான்டியாகோவில் நடந்த பான் அமெரிக்கன் விளையாட்டில் வெண்கலம் வென்றதும், பிரபலம் அடைந்தேன். தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் சிலி சார்பில் விளையாட உள்ளேன். ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் என கனவலும் நினைக்கவில்லை. 58 வயதில் தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. காயம் ஏற்படாமல் இருக்க வேண்டுமென கடவுளை பிரார்த்திக்கிறேன்.
நான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற செய்தி கேட்டதும், 92 வயதான எனது அப்பா 'சேரில்' இருந்து துள்ளிக் குதித்தார்.' உனது வாழ்நாள் கனவு நனவாகியுள்ளது. சிறப்பாக விளையாடு' என வாழ்த்தினார். சீனாவில் இருந்து எனது ஆட்டத்தை கண்டு களிக்க உள்ளார். சக வீரர், வீராங்கனைகளும் எனக்கு ஆதரவு அளிக்கின்றனர். என்னுடன் 'செல்பி' எடுத்து மகிழ்கின்றனர்,''என்றார்.
ஆட்டமா...பதக்க நோட்டமா
போர் பூமியான ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்ட புயல் தான் மனிஜா தலாஷ், 21. பாரிஸ் ஒலிம்பிக்கில் அறிமுகமாகியுள்ள 'பிரேக் டான்ஸ்' போட்டியில் பங்கேற்கிறார். 2021ல் ஆப்கனில் தலிபான் ஆட்சியை பிடித்ததும், பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. உடனே பாகிஸ்தான் எல்லை வழியாக நாட்டைவிட்டு தப்பிய தலாஷ், ஸ்பெயினில் 'செட்டில்' ஆனார். தற்போது அகதிகள் அணி சார்பில் பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்கிறார்.
தலாஷ் கூறுகையில்,''சமூகவலைதள 'வீடியோ'வில் ஒருவர் தலையை தரையில் வைத்து சுற்றி ஆடுவதை பார்த்தேன். இது போலியானது என நினைத்தேன். பின் 'பிரேக் டான்ஸ்' சாகசம் என்பதை அறிந்து கொண்டேன். நானும் ஆட துவங்கினேன். காபூல் நகர கிளப் ஒன்றில் பயற்சி எடுத்தேன். அங்கு 55 வீரர்கள் பயின்றனர். நான் மட்டும் ஒரே ஒரு பெண்ணாக பயற்சி மேற்கொண்டேன். தலிபான் ஆட்சியாளர்களுக்கு பெண்கள் நடனம் கற்பது பிடிக்கவில்லை. உள்ளூர் போலீஸ் மிரட்டல் காரணமாக கிளப் மூடப்பட்டது.
ஸ்பெயின் வந்ததும் நிலைமை மாறியது. 'பிரேக் டான்ஸ்' ஆர்வம் மீண்டும் துளிர்விட்டது. இதற்கு நல்ல உடற்தகுதி வேண்டும். 'ஜிம்'மில் தினமும் இரண்டு மணி நேரம் செலவிடுகிறேன். மாட்ரிட்டில் வாரத்தில் ஆறு நாள் 'பிரேக் டான்ஸ்' பயிற்சி எடுத்தேன். அகதிகள் அணி சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளேன். வானில் பறப்பதை போல உணர்கிறேன். எனக்கு இந்தியாவை பற்றி தெரியும். எனது அம்மா பாலிவுட் படங்களை விரும்பி பார்ப்பார்,''என்றார்.
குத்து...கபிலன் 'கெத்து'
பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பங்கேற்கும் இந்தியாவின் இளம் நடுவர் என்ற பெருமை பெறுகிறார் கர்னல். கபிலன் சாய் அசோக், 32. முன்னாள் வீரரான இவர், புனேயில் உள்ள ராணுவ விளையாட்டு மையத்தின் குத்துச்சண்டை பிரிவில் நிர்வாகியாக உள்ளார். உலக ராணுவ குத்துச்சண்டை கவுன்சிலின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் இவரே. மூன்று நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரே இந்திய நடுவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரராக உள்ளார்.