ADDED : மே 02, 2026 10:19 PM

புவனேஸ்வர்: இந்திய ஓபன் போல் வால்ட் போட்டியில் ம.பி., வீரர் குல்தீப் குமார் தேசிய சாதனை படைத்தார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், இந்திய ஓபன் உள்ளரங்கு தடகளம், போல் வால்ட் போட்டிகள் நடக்கின்றன. ஆண்களுக்கான போல் வால்ட் போட்டியில், மத்திய பிரதேசத்தின் குல்தீப் குமார் 21, அதிகபட்சமாக 5.41 மீ., தாண்டி முதலிடம் பிடித்தார். தவிர இவர், அதிக உயரம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன், கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்தின் தேவ் மீனா, 5.40 மீ., தாண்டியது தேசிய சாதனையாக இருந்தது.
அடுத்த இரு இடங்களை தமிழகத்தின் ரீகன் (5.25 மீ.,), ம.பி.,யின் தேவ் மீனா (5.20 மீ.,) கைப்பற்றினர்.
ஜூனியர் (20 வயது) ஆண்களுக்கான போல் வால்ட் போட்டியில் தமிழகத்தின் கவின் ராஜா (4.90 மீ.,), விஷால் (4.70 மீ.,) முதலிரண்டு இடங்களை தட்டிச் சென்றனர். உ.பி.,யின் சவுரப் யாதவ் (4.20 மீ.,) 3வது இடம் பிடித்தார்.
