பிரக்ஞானந்தா 3வது இடம்: சூப்பர் செஸ் கிளாசிக் தொடரில்
பிரக்ஞானந்தா 3வது இடம்: சூப்பர் செஸ் கிளாசிக் தொடரில்
ADDED : மே 24, 2026 09:54 PM

புக்காரெஸ்ட்: 'சூப்பர் செஸ் கிளாசிக்' தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா 3வது இடம் பிடித்தார்.
'கிராண்ட் செஸ் டூர்' 11வது சீசன், 6 தொடர்களாக நடக்கிறது. இதன் 2வது தொடரான 'சூப்பர் செஸ் கிளாசிக்', ருமேனியாவின் புக்காரெஸ்ட் நகரில் நடந்தது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் சின்டாரோவ் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர்.
இதன் 9வது சுற்றில் பிரக்ஞானந்தா (கருப்பு), நெதர்லாந்தின் அனிஷ் கிரி (வெள்ளை) மோதினர். விறுவிறுப்பான இப்போட்டி 31வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
உஸ்பெகிஸ்தானின் சின்டாரோவ், அமெரிக்காவின் சோ வெஸ்லே (அமெரிக்கா) மோதிய மற்றொரு போட்டி 46வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
பிரான்சின் மேக்சிம் வாசியர்-லாக்ரேவ், அமெரிக்காவின் பேபியானோ காருணா மோதிய மற்றொரு 9வது சுற்றும் 'டிரா'வில் முடிந்தது.
ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், நெதர்லாந்தின் ஜோர்டான் வான்-பாரெஸ்ட்டை வீழ்த்தினார்.
ஒன்பது சுற்றுகளின் முடிவில் 4 வெற்றி, 4 'டிரா', ஒரு தோல்வி என, 6.0 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த கீமர், சாம்பியன் பட்டம் வென்றார். சின்டாரோவ் (5.0 புள்ளி) 2வது இடம் பிடித்தார். பிரக்ஞானந்தா, பேபியானோ காருணா, அனிஷ் கிரி, மேக்சிம் வாசியர்-லாக்ரேவ் தலா 4.5 புள்ளிகளுடன் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டனர்.
