/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
உச்சம் தொடும் இந்திய வீரர் பிரணவ்
/
உச்சம் தொடும் இந்திய வீரர் பிரணவ்
ADDED : ஆக 22, 2024 11:55 PM

புதுடில்லி: 'வாழ்வில் வலிகளை வரமென கருதுகிறேன். பாரிஸ் பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன்,'' என பிரணவ் சூர்மா தெரிவித்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி (ஆக. 28-செப்., 8) நடக்க உள்ளது. இந்தியா சார்பில் 84 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இவர்களது வாழ்க்கை பயணம் கடினமானது. மனஉறுதியுடன் சோதனைகளை கடந்து சாதிக்கின்றனர். 'பைக்' விபத்தில் பாதிக்கப்பட்ட சுமித் அன்டில், பாரா ஈட்டி எறிதலில் உலக சாதனையாளராக திகழ்கிறார். இதே போல 'கிளப் த்ரோ' போட்டியில் அசத்துகிறார் பிரணவ் சூர்மா.
ஹரியானாவின் பரிதாபாத்தை சேர்ந்தவர் பிரணவ் சூர்மா 29. இவரது 16வது வயதில் (2011) பெரும் சோகத்தை சந்தித்தார். வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழ, இடிபாடுகளில் சிக்கினார். தண்டுவடம் பாதிக்கப்பட, நடக்க முடியவில்லை. பின் 'வீல் சேரில்' வாழ்க்கையை தொடர்ந்தார். மனம் தளராமல் போராடினார். பி.காம்., முடித்தார். போட்டித் தேர்வில் வெற்றி பெற்று, பரோடா வங்கியில் துணை மேனேஜர் ஆனார்.
'கிளப் த்ரோ' போட்டிஇவருக்குள் இருந்த விளையாட்டு ஆர்வம் தணியவில்லை. உடல்நிலை காரணமாக நீச்சல் ஆசை நிறைவேறவில்லை. நல்ல பயிற்சியாளர் கிடைக்காததால், டேபிள் டென்னிஸ் வீரராக முடியவில்லை. இறுதியில் 'கிளப் த்ரோ' போட்டியை தேர்வு செய்தார். இதில் மரத்திலான 'கிளப்பை' எறிய வேண்டும். ஈட்டி, வட்டு, குண்டு எறிதல் வரிசையில் 'கிளப் த்ரோ'வும் பாராலிம்பிக் போட்டியில் உண்டு. சமீபத்திய ஆசிய பாரலிம்பிக் 'கிளப் த்ரோ'வில் (எப் 51 பிரிவு) 30.01 மீ., துாரம் எறிந்த பிரணவ், ஆசிய சாதனையுடன் தங்கம் வென்றார். பாரிஸ் பாரலிம்பிக்கிலும் சாதிக்க காத்திருக்கிறார்.
பிரணவ் கூறியது: இளம் பருவத்தில் இருந்தே விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. வாழ்வில் நடந்த சோக சம்பவம் என்னை உடல் அளவில் முடக்கியது. இதை ஒருவிதத்தில் வரமாகவே கருதினேன். எனது அடையாளத்தை உலகிற்கு உணர்த்த ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டேன். 2016ல் நடந்த ரியோ பாராலிம்பிக் போட்டியின் போது, பாரா போட்டிகள் பற்றி அறிந்தேன். பாரா நீச்சல், டேபிள் டென்னிஸ் ஆசை கைகூடவில்லை. பின் பயற்சியாளர் நர்சி ராமை சந்திக்க நேர்ந்தது. இவர் தான் பாரா 'கிளப் த்ரோ'வில் களமிறங்கும்படி ஆலோசனை கூறினார்.
ஆசிய பதக்கம்: எனக்காக பெற்றோர் நிறைய தியாகம் செய்தனர். என்னை கவனித்துக் கொள்வதற்காக, தந்தை வேலையை துறந்தார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த தாய், குடும்ப பாரத்தை ஏற்றுக் கொண்டார். ஆசிய பாரலிம்பிக் போட்டியில் முதல் முறையாக களமிறங்கிய போது பதட்டமாக இருந்தது. இருப்பினும் 'கூலாக' செயல்பட்டு, தங்கம் வென்றேன்.
சிறந்த வாய்ப்பு:உலக விளையாட்டு அரங்கில் என் பெயரை ஒலிக்க செய்யவும் பெற்றோருக்கு பெருமை சேர்க்கவும், பாரிஸ் பாராலிம்பிக் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இதை பயன்படுத்திக் கொள்வேன். கடினமாக பயற்சி செய்கிறேன். பதக்கத்துடன் இந்தியா திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு பிரணவ் சூர்மா கூறினார்.