/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் பிரவீன் குமார்: பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில்
/
தங்கம் வென்றார் பிரவீன் குமார்: பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில்
தங்கம் வென்றார் பிரவீன் குமார்: பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில்
தங்கம் வென்றார் பிரவீன் குமார்: பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில்
ADDED : செப் 06, 2024 11:24 PM

பாரிஸ்: பாரிஸ் பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் பிரவீன் குமார் தங்கம் வென்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் உயரம் தாண்டுதல் (டி64) பைனலில் இந்தியாவின் பிரவீன் குமார் பங்கேற்றார். 2.08 மீ., உயரம் தாண்டிய பிரவீன், ஆசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற 2வது இந்தியர் ஆனார். இதற்கு முன், ரியோ பாராலிம்பிக்கில் (2016) தமிழகத்தின் மாரியப்பன் தங்கம் வென்றிருந்தார்.
இது, பாராலிம்பிக்கில் பிரவீன் வென்ற 2வது பதக்கம். ஏற்கனவே டோக்கியோவில் (2021) வெள்ளி (2.07 மீ.,) வென்றிருந்தார். பாரிஸ் பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் பதக்கம் கைப்பற்றிய 3வது இந்திய வீரரானார். இம்முறை ஷரத் குமார் (வெள்ளி), மாரியப்பன் (வெண்கலம்) பதக்கம் வென்றனர்.
வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே அமெரிக்காவின் டெரெக் லோசிடென்ட் (2.06 மீ.,), உஸ்பெகிஸ்தானின் டெமுர்பெக் கியாசோவ் (2.03 மீ.,) கைப்பற்றினர்.
6வது தங்கம்
பாராலிம்பிக் அரங்கில், ஒரு சீசனில் அதிக தங்கம் (6) வென்று வரலாறு படைத்தது இந்தியா. இதற்கு முன், டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 5 தங்கம் கிடைத்திருந்தது.
26 பதக்கம்
பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு இதுவரை 6 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் என, 26 பதக்கம் கிடைத்துள்ளன.
உ.பி., வீரர்
உத்தர பிரதேசத்தின் (உ.பி.,) நொய்டாவை சேர்ந்தவர் பிரவீன் குமார் 21. பிறவியிலேயே காலில் குறைபாடுடன் பிறந்த இவர், துவக்கத்தில் நண்பர்களுடன் வாலிபால் விளையாடினார். பின், பயிற்சியாளர் சத்யபால் சிங் உதவியுடன் உயரம் தாண்டுதலில் பங்கேற்றார். சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பாரா தடகள ஜூனியர் சாம்பியன்ஷிப் (2019) போட்டியில் வெள்ளி வென்றார். டோக்கியோ பாராலிம்பிக் (வெள்ளி, 2021), ஆசிய பாரா விளையாட்டு (தங்கம், 2023), உலக பாரா தடகளத்தில் (வெண்கலம், 2023) பதக்கம் வென்றார்.
பயிற்சியாளருக்கு நன்றி
மூன்று மாதங்களுக்கு முன், இடுப்பு பகுதி காயத்தால் அவதிப்பட்ட பிரவீன் குமார், பயிற்சியாளர் சத்யபால் சிங் உதவியுடன் விரைவில் குணமடைந்து பாரிஸ் பாராலிம்பிக் போட்டிக்கு தயாரானார். இதில் தங்கம் வென்று அசத்தினார்.
இதுகுறித்து பிரவீன் கூறுகையில், ''கடந்த ஜூன் மாதம் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பாராலிம்பிக்கில் பங்கேற்பது சந்தேகமாக இருந்தது. பயிற்சியாளர் சத்யபால் ஆலோசனைப்படி 15 நாட்களுக்குள் பூரண குணமடைந்து பயிற்சியை துவக்கினேன். இதற்காக அவருக்கு நன்றி. பாரிசில் வென்ற தங்கத்தை எனது பிஸியோதெரபிஸ்ட் பயிற்சியாளருக்கு சமர்ப்பிக்கிறேன்,'' என்றார்.
அரையிறுதியில் சிம்ரன்
பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் (டி12) தகுதிச் சுற்றில் இந்தியாவின் சிம்ரன் சர்மா பங்கேற்றார். பார்வை குறைபாடுள்ள இவருக்கு உதவியாளராக அபய் சிங் களமிறங்கினார். இலக்கை 25.41 வினாடியில் அடைந்த சிம்ரன், முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
* 100 மீ., ஓட்டத்தின் (டி12) பைனலில் பங்கேற்ற சிம்ரன், பந்தய துாரத்தை 12.31 வினாடியில் அடைந்து 4வது இடம் பிடித்து 0.5 வினாடியில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
பைனலில் திலிப்
ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் (டி47) தகுதிச் சுற்றில் இந்தியாவின் திலிப் மஹது களமிறங்கினார். இலக்கை 49.54 வினாடியில் அடைந்த இவர், 3வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார்.
துடுப்பு படகு: பிராச்சி, யாஷ் குமார் அபாரம்
ஆண்களுக்கான துடுப்பு படகு, 'கயாக்' பிரிவு (கே.எல்.1 ஒற்றையர் 200 மீ.,) தகுதிச் சுற்றில் 6வது இடம் பிடித்த இந்தியாவின் யாஷ் குமார் (1 நிமிடம், 03.27 வினாடி) அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
* பெண்களுக்கான துடுப்பு படகு, 'கயாக்' பிரிவு (கே.எல்.1 ஒற்றையர் 200 மீ.,) தகுதிச் சுற்றில் 5வது இடம் பிடித்த இந்தியாவின் பூஜா ஓஜா (1 நிமிடம், 16.09 வினாடி) அரையிறுதிக்கு முன்னேறினார்.
* பெண்களுக்கான துடுப்பு படகு, 'வா' பிரிவு (வி.எல்.2 ஒற்றையர் 200 மீ.,) தகுதிச் சுற்றில் 4வது இடம் பிடித்த இந்தியாவின் பிராச்சி யாதவ் (1 நிமிடம், 06.83 வினாடி) அரையிறுதிக்குள் நுழைந்தார்.
ஈட்டி எறிதல்: திபேஷ் ஏமாற்றம்
ஈட்டி எறிதல் (எப்54) பைனலில் இந்தியாவின் திபேஷ் குமார் பங்கேற்றார். கடந்த ஆண்டு டில்லியில் நடந்த கேலோ இந்தியா பாரா விளையாட்டில் தங்கம் வென்ற இவர், அதிகபட்சமாக 26.11 மீ., மட்டும் எறிந்து 7வது இடம் பிடித்தார். பாராலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்ற இவான் ரெவென்கோ (30.77 மீ.,) தங்கம் வென்றார்.
குண்டு எறிதல்: அரவிந்த் '6'
குண்டு எறிதல் (எப்35) பைனலில் இந்தியாவின் அரவிந்த் பங்கேற்றார். அதிகபட்சமாக 13.01 மீ., எறிந்த இவர், 6வது இடம் பிடித்தார். உஸ்பெகிஸ்தானின் நோர்பெகோவ் (16.82 மீ.,) தங்கம் கைப்பற்றினார்.