/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வெல்வாரா பிரவீன்: உலக 'பாரா' தடகளத்தில்
/
தங்கம் வெல்வாரா பிரவீன்: உலக 'பாரா' தடகளத்தில்
ADDED : செப் 22, 2025 10:42 PM

புதுடில்லி: ''உலக 'பாரா' தடகளத்தில் தங்கம் வெல்வதே இலக்கு,'' என, இந்திய உயரம் தாண்டுதல் வீரர் பிரவீன் குமார் தெரிவித்தார்.
டில்லியில், வரும் செப். 27ல் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன் துவங்குகிறது. இதற்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ('டி64') இந்தியா சார்பில் பிரவீன் குமார் 22, பங்கேற்கிறார். பாராலிம்பிக்கில் இரண்டு பதக்கம் (2024ல் தங்கம், 2020ல் வெள்ளி), ஆசிய பாரா விளையாட்டில் தங்கம் (2022) வென்ற இவர், உலக தடகளத்தில் 4வது முறையாக களமிறங்குகிறார். கடந்த 2019ல் துபாயில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக விளையாடிய பிரவீன், 4வது இடம் பிடித்தார். பின், 2023ல் பாரிசில் நடந்த போட்டியில் வெண்கலம் கைப்பற்றிய இவர், கடந்த ஆண்டு ஜப்பானில் நடந்த போட்டியில் 4வது இடம் பிடித்து பதக்கத்தை நழுவவிட்டார்.
இதுகுறித்து பிரவீன் குமார் கூறுகையில், ''நான்காவது முறையாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவுள்ள நான், ஒரு முறை மட்டும் வெண்கலம் வென்றுள்ளேன். இம்முறை தங்கம் வெல்வதே இலக்கு. இதற்கு, முதலில் 2.10 மீ., உயரத்தை இலக்காக கொண்டு விளையாட வேண்டும். ஏற்கனவே 2.08 மீ., உயரம் தாண்டி உள்ளேன். கடினமாக பயிற்சி மேற்கொண்டால் 2.10 மீ., உயரத்தை எட்டலாம். கடந்த ஆண்டு காயத்தால் பதக்கத்தை தவறவிட்டேன். இம்முறை முழு உடற்தகுதியுடன் இருப்பதால் தங்கம் வென்று சாதிப்பேன் என நம்புகிறேன்,'' என்றார்.