ADDED : மே 24, 2024 10:30 PM

ஆன்ட்வெர்ப்: புரோ லீக் ஹாக்கி தொடரில் இந்திய அணி 1--4 என பெல்ஜியத்திடம் வீழ்ந்தது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் 5வது சீசன் நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப்பில் நடந்த போட்டியில் இந்தியா ('நம்பர்-6'), பெல்ஜியம் ('நம்பர்-3') அணிகள் மோதின. இந்திய வீரர் ஜெர்மன்பிரீத் சிங் தனது 100வது போட்டியில் களமிறங்கினார்.
முதல் 20 நிமிடம் இந்திய அணியின் பெல்ஜியம் தாக்குதலை சமாளித்தனர். பின் பெல்ஜியம் கோல் மழை பொழிந்தது. 22 வது நிமிடம் பெலிக்ஸ், 34வது நிமிடம் அலெக்சாண்டர் தலா ஒரு கோல் அடித்தனர். தொடர்ந்து 49வது நிமிடம் சார்லியர் கோல் அடித்தார். போட்டியின் 55 வது நிமிடம் இந்தியா சார்பில் அபிஷேக் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார்.
கடைசி நிமிடத்தில் மீண்டும் அசத்திய அலெக்சாண்டர் ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணி, இதுவரை விளையாடிய 10 போட்டியில், 6 வெற்றி, 4 தோல்வி என 17 புள்ளிகளுடன் .3வது இடத்தில் தொடர்கிறது.
பெண்கள் தோல்வி
பெண்களுக்கான புரோ லீக் தொடரில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய அணி 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.