ADDED : பிப் 09, 2024 10:26 PM

கோல்கட்டா: புரோ கபடி லீக் போட்டியில் குஜராத் அணி 41-32 என பெங்கால் அணியை வீழ்த்தியது.
இந்தியாவில் புரோ கபடி லீக் 10வது சீசன் நடக்கிறது. நேற்று கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய குஜராத் அணியினர், பெங்கால் வீரர்களை 'ஆல்-அவுட்' செய்தனர். முதல் பாதி முடிவில் குஜராத் அணி 18-14 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியிலும் அசத்திய குஜராத் அணிக்கு ராகேஷ், பார்தீக் உள்ளிட்டோர் கைகொடுத்தனர். நிதின் குமார், கேப்டன் மனிந்தர் சிங் உள்ளிட்டோர் ஆறுதல் தந்த போதும் பெங்கால் அணியால் முன்னிலை பெற முடியவில்லை. ஆட்டநேர முடிவில் குஜராத் அணி 41-32 என வெற்றி பெற்றது. குஜராத் அணிக்கு பார்தீக் (13 புள்ளி) கைகொடுத்தார். பெங்கால் சார்பில் நிதின் குமார் 12 புள்ளி பெற்றார்.
இதுவரை விளையாடிய 19 போட்டியில், 11 வெற்றி உட்பட 60 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறிய குஜராத் அணி 'பிளே-ஆப்' சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டது.

