/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
புரோ லீக் ஹாக்கி: இந்திய பெண்கள் ஏமாற்றம்
/
புரோ லீக் ஹாக்கி: இந்திய பெண்கள் ஏமாற்றம்
UPDATED : பிப் 16, 2025 11:00 PM
ADDED : பிப் 16, 2025 08:41 PM

புவனேஸ்வர்: புரோ லீக் ஹாக்கியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி 1-2 என 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான புரோ லீக் 6வது சீசன் (2024-25) நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மீண்டும் மோதின.
முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. பின் 40வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் இங்கிலாந்தின் பைஜ் கில்லட் ஒரு கோல் அடித்தார். இதற்கு 'பெனால்டி ஸ்டிரோக்' மூலம் இந்தியாவின் நவ்னீத் கவுர் (53வது நிமிடம்) ஒரு கோல் அடித்து பதிலடி தந்தார். இங்கிலாந்தின் டெஸ்சா ஹோவர்ட் (56வது), இந்தியாவின் ருதுஜா (57வது) அடுத்தடுத்து தலா ஒரு கோல் அடித்தனர். ஆட்டநேர முடிவில் போட்டி 2-2 என சமநிலையில் இருந்தது.
போட்டியின் முடிவு 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்பு வழங்கப்பட்டன. நவ்னீத் கவுர் (இந்தியா), லில்லி வால்கர் (இங்கிலாந்து) மட்டும் கோல் அடிக்க, போட்டி 1-1 என மீண்டும் சமநிலை அடைந்தது. பின் 'சடன்டெத்' முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. இதில் ஏமாற்றிய இந்தியா 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இங்கிலாந்துக்கு 2, இந்தியாவுக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்திய அணி, 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.