/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வெள்ளி வென்றார் சச்சின்: பாராலிம்பிக் குண்டு எறிதலில்
/
வெள்ளி வென்றார் சச்சின்: பாராலிம்பிக் குண்டு எறிதலில்
வெள்ளி வென்றார் சச்சின்: பாராலிம்பிக் குண்டு எறிதலில்
வெள்ளி வென்றார் சச்சின்: பாராலிம்பிக் குண்டு எறிதலில்
ADDED : செப் 05, 2024 12:21 AM

பாரிஸ்: பாரிஸ் பாராலிம்பிக் குண்டு எறிதலில் இந்தியாவின் சச்சின் கிலாரி வெள்ளி வென்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான குண்டு எறிதல் (எப்46) பைனலில் இந்தியாவின் முகமது யாசர், ரோகித் குமார், சச்சின் சர்ஜேராவ் கிலாரி உட்பட மொத்தம் 10 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு வீரருக்கும் தலா 6 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதில் சச்சின் கிலாரி, தனது 2வது வாய்ப்பில் அதிகபட்சமாக 16.32 மீ., எறிந்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். தவிர இவர், தனது சொந்த ஆசிய சாதனையை முறியடித்தார். கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அதிகபட்சமாக 16.30 மீ., எறிந்து ஆசிய சாதனை படைத்திருந்தார்.
கனடாவின் கிரெக் ஸ்டீவர்ட் (16.38 மீ.,) குரோஷியாவின் லுாகா பாகோவிச் (16.27 மீ.,) முறையே தங்கம், வெண்கலம் வென்றனர். இப்பிரிவில் உலக சாதனை (16.80 மீ.,) படைத்த அமெரிக்காவின் ஜோஷுவா சின்னமோ (15.66 மீ.,) 4வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். மற்ற இந்திய வீரர்களான முகமது யாசர் (14.10 மீ.,), ரோகித் குமார் (14.10 மீ.,) முறையே 8, 9வது இடம் பிடித்தனர்.
அமிஷா ஏமாற்றம்: பெண்களுக்கான குண்டு எறிதல் (எப்46) பைனலில் இந்தியாவின் அமிஷா ராவத் 21, பங்கேற்றார். முதல் வாய்ப்பில் 9.25 மீ., மட்டும் எறிந்த இவர், 14வது இடம் பிடித்து ஏமாற்றினார். இருப்பினும் தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தார். அமெரிக்காவின் நோயெல் மல்கமாகி (14.06 மீ.,) உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
துப்பாக்கி சுடுதல்: நிஹால் 19வது இடம்
துப்பாக்கி சுடுதல் கலப்பு 50 மீ., பிஸ்டல் (எஸ்.எச்.1) பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் நிஹால் சிங், ருத்ரன்ஷ் கண்டேல்வால் பங்கேற்றனர். இதில் நிஹால் சிங் (522.6 புள்ளி), ருத்ரன்ஷ் (517.3 புள்ளி) முறையே 19, 22வது இடம் பிடித்து ஏமாற்றினர்.
டேபிள் டென்னிஸ்: பவினா தோல்வி
டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் பவினாபென் படேல், சீனாவின் யிங் ஜோவ் மோதினர். இதில் ஏமாற்றிய பவினாபென் 1-3 (12-14, 9-11, 11-8, 6-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
பவர்லிப்டிங்: பரம்ஜீத் 8வது இடம்
ஆண்களுக்கான பவர்லிப்டிங் 49 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் பரம்ஜீத் குமார் பங்கேற்றார். அதிகபட்மாக 150 கிலோ துாக்கிய இவர், 8வது இடம் பிடித்து ஏமாற்றினார்.
சைக்கிளிங்: அர்ஷத் 11வது இடம்
சைக்கிள் பந்தயத்தில் ஆண்களுக்கான 'ரோடு டைம் டிரையல்' பிரிவு (சி2) பைனலில் இந்தியாவின் அர்ஷத் ஷேக், இலக்கை 25 நிமிடம், 20.11 வினாடியில் அடைந்து 11வது இடம் பிடித்தார்.
* பெண்களுக்கான 'ரோடு டைம் டிரையல்' பிரிவு (சி1-3) பைனலில் பந்தய துாரத்தை 30 நிமிடம், 00.16 வினாடியில் அடைந்த இந்தியாவின் ஜோதி கடேரியா 16வது இடத்தை கைப்பற்றினார்.
அமெரிக்க வீராங்கனை அபாரம்
அமெரிக்க வீராங்கனை ஓக்சனா மாஸ்டர்ஸ் 35, 'ரோயிங்', சைக்கிளிங், கிராஸ்-கன்ட்ரி ஸ்கீயிங், பயத்லான் என 4 வகையான போட்டிகளில் பங்கேற்று வருகிறார். பாரிஸ் பாராலிம்பிக் சைக்கிள் பந்தயத்தின் 'ரோடு டைம் டிரையல்' பிரிவில் (எச்4-5) இலக்கை 23 நிமிடம், 45.20 வினாடியில் அடைந்து தங்கம் வென்றார். இது, பாராலிம்பிக்கில் இவரது 3வது தங்கம், 4வது பதக்கம். தவிர இவர், பாராலிம்பிக், குளிர்கால பாராலிம்பிக்கில் 18 பதக்கம் (8 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம்) வென்றுள்ளார்.
பவர்லிப்டிங்: சகினா 7வது இடம்
பெண்களுக்கான பவர்லிப்டிங் 45 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சகினா காதுன் 35, பங்கேற்றார். அதிகபட்சமாக 86 கிலோ மட்டும் துாக்கிய இவர், 7வது இடம் பிடித்தார். சீனாவின் லிங்லிங் குவோ (123 கிலோ) உலக சாதனையுடன் தங்கம் கைப்பற்றினார்.