/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சார்ஜா செஸ்: அரவிந்த் முதலிடம்
/
சார்ஜா செஸ்: அரவிந்த் முதலிடம்
ADDED : மே 19, 2024 11:51 PM

சார்ஜா: சார்ஜா மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் முதலிடத்தில் நீடிக்கிறார்.
சார்ஜாவில், 7வது மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. ஒன்பது சுற்று கொண்ட இத்தொடரில் 19 இந்தியர் உட்பட மொத்தம் 88 பேர் பங்கேற்கின்றனர். இதன் 5வது சுற்றில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், ஐக்கிய அரபு எமிரேட்சின் சலே சலேம் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அரவிந்த், 48வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ரஷ்யாவின் வோலோடர் முர்சின் மோதினர். விறுவிறுப்பான இப்போட்டி 44வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இந்தியாவின் சங்கல்ப் குப்தா, அமெரிக்காவின் சாமுவேல் சேவியன் மோதிய மற்றொரு 5வது சுற்றுப்போட்டி 30வது நகர்த்தலின் போது 'டிரா' ஆனது.
மற்ற 5வது சுற்றில் இந்தியாவின் பிரனவ், அதிபன் வெற்றி பெற்றனர். மற்ற இந்திய வீரர்களான நிகால் சரின், இனியன், அபிமன்யு மிஷ்ரா, பிரனவ் ஆனந்த், ஆதித்யா மிட்டல், சித்தார்த் ஜெகதீஷ், அபிஜீத் குப்தா ஆகியோர் தங்களது ஆட்டத்தை 'டிரா' செய்தனர். இந்தியாவின் சேதுராமன், ஹரிகா, அபிமன்யு புரானிக் தோல்வியை தழுவினர்.
ஐந்து சுற்றுகளின் முடிவில் 4.5 புள்ளிகளுடன் அரவிந்த் சிதம்பரம் முதலிடத்தில் தொடர்கிறார். தலா 3.5 புள்ளிகளுடன் அர்ஜுன் எரிகைசி, சங்கல்ப் குப்தா, நிகால் சரின் முறையே 9, 13, 14வது இடத்தில் உள்ளனர்.

