ADDED : மே 18, 2024 10:36 PM

போபால்: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் தகுதி போட்டியில் சிப்ட் கவுர், நீரஜ் குமார் முதலிடம் பிடித்தனர்.
பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் பங்கேற்கும் இந்திய நட்சத்திரங்களுக்கான தகுதி போட்டி போபாலில் நடக்கிறது. பெண்களுக்கான 50 மீ., 'ரைபிள் 3 பொஷிசன்ஸ்' பைனலில் சிப்ட் கவுர் சாம்ரா 461.3 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். அடுத்த இரு இடங்களை நிஷல் (460.3 புள்ளி), ஆஷி (448.1) கைப்பற்றினர். கடைசி இரு இடங்களை ஷிரியங்கா, அஞ்சும் பிடித்தனர்.
ஆண்களுக்கான 50 மீ., 'ரைபிள் 3 பொஷிசன்ஸ்' பைனலில் நீரஜ் குமார் 462.9 புள்ளிகளுடன் முதலிடத்தை தட்டிச் சென்றார். அடுத்த இரு இடங்களை செயின் சிங் (461.2 புள்ளி), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (448.9) கைப்பற்றினர். நான்காவது, 5வது இடத்தை ஸ்வப்னில் குசேல், அகில் ஷியோரன் பிடித்தனர்.
பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் முதலிரண்டு இடங்களை மனு பாகர், ரிதம் சங்வான் உறுதி செய்தனர். ஆண்கள் பிரிவில் சரப்ஜோத் சிங், அர்ஜுன் சிங் சீமா முதலிரண்டு இடங்களை கைப்பற்றினர்.
