/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பதக்க மழை பொழிய வேண்டும்... * மனம் திறக்கிறார் மனு பாகர்
/
பதக்க மழை பொழிய வேண்டும்... * மனம் திறக்கிறார் மனு பாகர்
பதக்க மழை பொழிய வேண்டும்... * மனம் திறக்கிறார் மனு பாகர்
பதக்க மழை பொழிய வேண்டும்... * மனம் திறக்கிறார் மனு பாகர்
ADDED : ஆக 13, 2024 11:26 PM

புதுடில்லி: ''இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வெல்வதே இலக்கு,''என மனு பாகர் தெரிவித்தார்.
பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இளம் வீராங்கனை மனு பாகர் அசத்தினார். 10 மீ., ஏர் பிஸ்டல் தனிநபர், கலப்பு பிரிவில் சரப்ஜோத் சிங் உடன் சேர்ந்து வெண்கலம் வென்றார். சுதந்திர இந்தியாவில் ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற முதல் இந்தியர் என வரலாறு படைத்தார். 25 மீ., பிஸ்டல் பிரிவில் நுாலிழையில் வெண்கலத்தை நழுவவிட்ட இவர், நான்காவது இடம் பிடித்தார். நிறைவு விழாவில் இந்திய ஹாக்கி கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் உடன் மூவர்ணக்கொடியை ஏந்தி வந்தார். ஒலிம்பிக் முடிந்த நிலையில், பாரிசில் இருந்து கிளம்பிய மனு பாகர், நேற்று டில்லி விமான நிலையம் வந்திறங்கினார்.
மனு பாகர் கூறுகையில்,''ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே அனைத்து விளையாட்டு நட்சத்திரங்களின் குறிக்கோளாக உள்ளது. இரண்டு பதக்கம் வென்றது சிறப்பான விஷயம். எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக அதிக பதக்கங்கள் வெல்வதே இலக்கு.
இனிய அனுபவம்
ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய கொடியை ஏந்தி வந்தது மறக்க முடியாத அனுபவம். வாழ்நாளில் கிடைத்த அரிய வாய்ப்பு. இதன் நினைவுகள் நீண்ட காலம் நிலைத்திருக்கும். என்னுடன் ஸ்ரீஜேஷ் கலந்து கொண்டார். இவரை சிறுவயதில் இருந்தே தெரியும். அணிவகுப்பில் எனக்கு பக்கபலமாக இருந்தார்.
மனு பாகரின் தாயார் சுமேதா கூறுகையில்,''பாரிஸ் பயணம் இனிமையானதாக இருந்தது. பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியினர், அமன் ஷெராவாத் (மல்யுத்தம்), நீரஜ் சோப்ராவை சந்தித்தேன். இவர்கள் தொடர்ந்து பதக்கம் வென்று தாய்நாட்டுக்கு பெருமை சேர்க்கட்டும்,''என்றார்.
3 மாதம் 'பிரேக்'
மனு பாகரின் பயிற்சியாளரும் இந்திய முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீரருமான ஜஸ்பால் ராணா கூறுகையில்,''ஒலிம்பிக் போட்டிக்காக மனு பாகர் நீண்ட காலம் பயிற்சி மேற்கொண்டார். இதனால் மூன்று மாதம் 'பிரேக்' எடுக்க திட்டமிட்டுள்ளார். வரும் அக்டோபரில் டில்லியில் நடக்க உள்ள உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் பங்கேற்க வாய்ப்பு இல்லை. சிறிய ஓய்வுக்கு பின், 2026ல் நடக்க உள்ள ஆசிய, காமன்வெல்த் போட்டியில் சாதிக்க பயிற்சியை துவக்குவார்,''என்றார்.
நீரஜ் உடன் திருமணமா...
பாரிசில் உள்ள 'இந்தியா ஹவுசில்' வெள்ளி நாயகன் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்) 26, இரு வெண்கலம் வென்ற மனு பாகருக்கு 22, பாராட்டு விழா நடந்தது. அப்போது இருவரும் சகஜமாக பேசிக் கொண்டனர். உடன் இருந்த மனு பாகரின் தாயார் சுமேதா, திடீரென நீரஜ் கையை தனது தலை மீது வைத்து ஆசிர்வாதம் வாங்குவது போல செய்தார். இவர்கள் ஹரியானாவை சேர்ந்தவர்கள் என்பதால், நீரஜ்-மனு பாகர் திருமணம் பற்றி பேசியிருக்கலாம் என செய்திகள் வெளியாகின. இது தொடர்பான 'வீடியோ' வைரலாகின.
இதை மறுத்த மனு பாகர் தந்தை ராம் கிஷண் கூறுகையில்,''மனு சின்னப் பெண். திருமண வயதை இன்னும் எட்டவில்லை. இவரது திருமணம் பற்றி தற்போது நினைத்து கூட பார்க்கவில்லை. மனுவின் தாயார், நீரஜை தன் மகன் போல கருதுகிறார்,''என்றார்.
நீரஜ் உறவினர் ஒருவர் கூறுகையில்,''நீரஜ் பதக்கம் வென்ற செய்தி இந்தியா முழுவதும் தெரியும். இது போல அவர் திருமணம் முடிக்கும் போது, அனைவருக்கும் தெரிவிக்கப்படும்,''என்றார்
ஹாக்கி வீரர்கள் உற்சாகம்
பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்ற கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ், அமித் ரோஹிதாஸ், சுமித், அபிஷேக், சஞ்சய் உள்ளிட்ட வீரர்கள் நேற்று பாரிசில் இருந்து டில்லி விமான நிலையம் வந்தனர். இவர்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுமித் கூறுகையில்,''டோக்கியோ, பாரிஸ் என தொடர்ந்து இரு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற எங்கள் மீது மக்கள் அன்பை பொழிகின்றனர். இது, இந்தியாவில் ஹாக்கி விளையாட்டுக்கும், அதன் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான தருணம்,''என்றார்.

