தங்கம் வென்றார் பிராச்சி * உலக துப்பாக்கிசுடுதலில்...
தங்கம் வென்றார் பிராச்சி * உலக துப்பாக்கிசுடுதலில்...
ADDED : ஏப் 23, 2026 11:11 PM

கெய்ரோ: ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில் இந்தியாவின் பிராச்சி தங்கம் கைப்பற்றினார்.
எகிப்தின் கெய்ரோவில் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் (ரைபிள்/பிஸ்டல்/ஷாட் கன்) நடக்கிறது. பெண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவில் தகுதிச்சுற்று நடந்தது.
இந்தியாவின் பிராச்சி கெய்க்வாட், மான்யா, அனுஷ்கா, ஸ்ரீவள்ளி உட்பட 22 பேர் பங்கேற்றனர்.
இதில் 578 புள்ளியுடன் 6வது இடம் பெற்ற பிராச்சி உட்பட, 'டாப்-8' வீராங்கனைகள் பைனலுக்கு முன்னேறினர். மற்ற இந்திய வீராங்கனைகள் தகுதிச்சுற்றுடன் திரும்பினார். அடுத்து நடந்த பைனலில் கடைசி ஷாட்டில் (10.0) அசத்திய பிராச்சி, மொத்தம் 354.6 புள்ளி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
கடைசி ஷாட்டில் (9.6) ஏமாற்றிய பெலாரசின் டார்யா (354.4), 0.2 புள்ளி வித்தியாசத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
நரேன் 'வெண்கலம்'
ஆண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் ஜூனியர் பிரிவு தகுதிச்சுற்றில் அசத்திய இந்திய வீரர்கள் நரேன் பிரனவ் 3, அபினவ் ஷா 4, திவ்யான்ஷு 6வது என 3 பேர் பைனலுக்கு முன்னேறினர்.
இதில் நரேன் 229.5 புள்ளியுடன் 3வது இடம் பெற, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
இந்தியா இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் வென்று, பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. பெலாரஸ் (2 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம்), கஜகஸ்தான் (2 தங்கம்) அடுத்த இரு இடத்தில் உள்ளன.
