ADDED : ஏப் 26, 2026 07:43 PM

மாட்ரிட்: ஸ்பெயினில், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றல் செக்குடியரசின் கேத்ரினா சினியகோவா, அமெரிக்காவின் கார்டி மெக்னல்லி மோதினர். இதில் ஏமாற்றிய சினியகோவா 3-6, 6-2, 6-7 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார். மற்றொரு 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியா மோதினர். இதில் அசத்திய கோகோ காப் 4-6, 7-5, 6-1 என வெற்றி பெற்று 'ரவுண்டு-16' சுற்றுக்குள் நுழைந்தார்.
ஆர்சனல் முதலிடம்
லண்டன்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து 34வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் ஆர்சனல், நியூகேசில் யுனைடெட் அணிகள் மோதின. ஆர்சனல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 34 போட்டியில், 22 வெற்றி, 7 'டிரா', 5 தோல்வி என, 73 புள்ளிகளுடன் ஆர்சனல் அணி மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியது. இரண்டாவது இடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி (70 புள்ளி) உள்ளது. இரு அணிகளும் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றன.
பலே பார்சிலோனா
மாட்ரிட்: ஸ்பெயினில், 'லா லிகா' கோப்பை கால்பந்து 95வது சீசன் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' பார்சிலோனா அணி 2-0 என்ற கோல் கணக்கில் கடாபே அணியை வீழ்த்தியது. இதுவரை விளையாடிய 33 போட்டியில், 28 வெற்றி, ஒரு 'டிரா', 4 தோல்வி என, 85 புள்ளிகளுடன் முதலிடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்த பார்சிலோனா அணி 29வது முறையாக கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகபடுத்திக் கொண்டது. இரண்டாவது இடத்தில் ரியல் மாட்ரிட் அணி (74 புள்ளி) உள்ளது.
எக்ஸ்டிராஸ்
* கர்நாடாவில், தேசிய ஜூனியர் (20 வயது) பெடரேஷன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் தமிழகத்தின் ராய்ஷன் (15.75 மீ.,) முதலிடத்தை கைப்பற்றினார்.
* டில்லியில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் முகமதன், ஸ்போர்டிங் டில்லி அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.
* அமெரிக்காவில் நடந்த தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ், அமெரிக்க வீரர் ஜுவான் கார்லஸ் குவேராவை வீழ்த்தினார். தொடர்ச்சியாக 6வது வெற்றியை பதிவு செய்த நிஷாந்த், 4ல் 'நாக்-அவுட்' முறையில் வென்றார்.
* பெங்களூருவில் நடந்த 'வேர்ல்டு 10கே' ஓட்டத்தில் புருண்டியன் வீரர் ரோட்ரிக் கிவிசேரா (27 நிமிடம், 31 வினாடி), ருவாண்டா வீராங்கனை புளோரன்ஸ் நியோன்குரு (30 நிமிடம், 45 வினாடி) முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
