/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்திய வீராங்கனைகள் புதிய சாதனை * தெற்காசிய ஜூனியர் தடகளத்தில்...
/
இந்திய வீராங்கனைகள் புதிய சாதனை * தெற்காசிய ஜூனியர் தடகளத்தில்...
இந்திய வீராங்கனைகள் புதிய சாதனை * தெற்காசிய ஜூனியர் தடகளத்தில்...
இந்திய வீராங்கனைகள் புதிய சாதனை * தெற்காசிய ஜூனியர் தடகளத்தில்...
ADDED : செப் 11, 2024 11:10 PM

சென்னை: தெற்காசிய ஜூனியர் தடகளம் முதல் நாளில், இந்தியாவின் பூஜா (உயரம் தாண்டுதல்), அபிநயா (100 மீ., ஓட்டம்) புதிய சாதனையுடன் தங்கம் வென்றனர்.
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப், 4வது சீசன் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கியது. இந்தியாவின் 62 வீரர், வீராங்கனை உட்பட மொத்தம் 210 பேர் பங்கேற்கின்றனர். முதலில் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் சித்தார்த் சவுத்ரி, அனுராக் சிங் களமிறங்கினார்.
நான்காவது வாய்ப்பில் அதிகபட்சம் 19.19 மீ., துாரம் எறிந்த சித்தார்த் சவுத்ரி, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். தவிர தெற்காசிய ஜூனியர் தடகளத்தில் இது புதிய சாதனையாக அமைந்தது. முன்னதாக 2018ல் இந்திய வீரர் ஆகாஷ், 18.53 மீ., துாரம் எறிந்து இருந்தார். மற்றொரு இந்திய வீரர் அனுராக் சிங், 18.91 மீ., துாரம் எறிய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இலங்கையின் ஜெயவி (15.62) வெண்கலம் வென்றார்.
அபிநயா அசத்தல்
பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் அபிநயா ராஜராஜன் (தமிழகம்), 11.77 வினாடி நேரத்தில் ஓடி வந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். தவிர இது தெற்காசிய ஜூனியர் தடகளத்தில் புதிய சாதனை ஆனது. இந்தியாவின் சுதீக் ஷா (11.92) வெள்ளி வென்றார். ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் மிருத்யம் ஜெயராம் (10.56) வெண்கலம் வசப்படுத்தினார்.
பூஜா அபாரம்
பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பூஜா, 1.80 மீ., தாண்டி, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இது புதிய தெற்காசிய சாதனை ஆனது. இதற்கு முன் 2007ல் இலங்கையில் ரணசிங்கே, 1.75 மீ., தாண்டி இருந்தார். இலங்கையின் திமேஷ் (1.65), நேத்ரா (1.65) அடுத்த இரு இடம் பிடித்தனர்.
பெண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் லட்சுமி பிரியா, 2 நிமிடம், 10.87 வினாடி நேரத்தில் வந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் முதல் மூன்று இடம் பிடித்த வீரர்கள், புதிய சாதனை நிகழ்த்தினர். இந்தியாவின் வினோத் குமார் (1:50.07), போபண்ணா (1:50.45) 2, 3வது இடம் பிடிக்க, வெள்ளி, வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இலங்கையின் அவிஷ்கா (1:49.83 நிமிடம்) தங்கம் வென்றார். இதற்கு முன் பி.வர்மா 1:52.99 நிமிடத்தில் ஓடி இருந்தார்.
9 பதக்கம்
தெற்காசிய ஜூனியர் தடகளத்தில் முதல் நாளான நேற்று இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் கைப்பற்றியது. இலங்கை 9 பதக்கம் (3 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) வென்றது.
தமிழக அரசு உதவி
துவக்கவிழாவில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்று பேசியதாவது:
செஸ் ஒலிம்பியாட், ஆசிய ஹாக்கி, ஸ்குவாஷ் என கடந்த இரு ஆண்டுகளில் பல சர்வதேச, தேசிய போட்டிகள் நடத்திய மையமாக தமிழகம் இருக்கின்றது. தொடர்ந்து பல தொடர்களை தமிழகத்தில் நடத்தி வீரர், வீராங்கனைகளை அரசு ஊக்குவித்து வருகின்றது. அந்த வகையில் தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் தொடருக்காக ரூ. 3.67 கோடி அரசு ஒதுக்கியது. அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மையங்கள் உருவாக்க திட்டமிட்டு, கிரிக்கெட் மைதானமானது அமைய இருக்கின்றது. மொத்தமாக ரூ. 100 கோடி ஒதுக்கீட்டில் சர்வதேச தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கான வேலைகள் நடக்கின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.