/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தெற்காசிய தடகளம்: இந்தியா சாம்பியன் * 48 பதக்கம் வென்று அபாரம்
/
தெற்காசிய தடகளம்: இந்தியா சாம்பியன் * 48 பதக்கம் வென்று அபாரம்
தெற்காசிய தடகளம்: இந்தியா சாம்பியன் * 48 பதக்கம் வென்று அபாரம்
தெற்காசிய தடகளம்: இந்தியா சாம்பியன் * 48 பதக்கம் வென்று அபாரம்
ADDED : செப் 13, 2024 11:25 PM

சென்னை: தெற்காசிய ஜூனியர் தடகளத்தில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது இந்தியா. மொத்தம் 48 பதக்கம் கைப்பற்றியது.
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப், நான்காவது சீசன் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. நேற்று நடந்த பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் தீபிகா, முதல் வாய்ப்பில் 53.02 மீ., துாரம் எறிந்து, சாதனை படைத்தார். தொடர்ந்து நான்காவது வாய்ப்பில் 54.98 மீ., துாரம் எறிந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக புதிய சாதனை படைத்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இதற்கு முன் 2018ல் 48.08 மீ., துாரம் எறியப்பட்டு இருந்தது. இந்தியாவின் பூனம் (51.21மீ.,) வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர்கள் ரோஹன் யாதவ், திபான்ஷு சர்மா முறையே தங்கம், வெள்ளி கைப்பற்றினர்.
பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் உன்னதி (23.91 வினாடி), நான்சி (24.11), நீரு பதக் (24.91) முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றனர். ஆண்கள் 200 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் பிரதிக் மஹாராணா (21.41) வெள்ளி வென்றார்.
பெண்களுக்கான 4X100 மீ., தொடர் ஓட்டத்தில் இந்திய அணி (45.08 வினாடி) புதிய சாதனை படைத்து, தங்கப்பதக்கம் வென்றது.
ரிஷிகா சாதனை
பெண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் இந்தியாவின் ரிஷிகா அவஸ்தி, 12. 76 மீ., துாரம் தாண்டி, புதிய சாதனையுடன் தங்கம் கைப்பற்றினார். பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் தமன்னா (14.43 மீ.,), பூஜா குமாரி (14.02 மீ.,) முறையே தங்கம், வெள்ளி வென்றனர்.
ஆண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் இந்திய வீரர்கள் பிரியான்ஷு (3 நிமிடம், 53.22 வினாடி), ராகுல் சர்னாலியா (3:53.64) முறையே தங்கம், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினர். பெண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் வினீதா தங்கம் (4 நிமிடம், 33.63 வினாடி), லக்சிதா (4:37.61) முறையே தங்கம், வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.
பெண்களுக்கான 4X400 மீ., தொடர் ஓட்டத்தில் இந்திய அணி (3 நிமிடம், 44.35 வினாடி) தங்கப்பதக்கம் கைப்பற்ற, இலங்கை (3:49.99), வங்கதேச அணிகள் (3:57.37) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றின. ஆண்களுக்கான 4X400 மீ., தொடர் ஓட்டத்தில் இந்திய அணி (3 நிமிடம், 11.14 வினாடி) வெள்ளி வென்றது. ஒட்டுமொத்தமாக 48 பதக்கம் வென்ற இந்தியா, ஒட்டுமொத்த சாம்பியன் ஆனது.
21 தங்கம்
தெற்காசிய ஜூனியர் தடகளத்தில் மொத்தம் 30 பிரிவுகளில் போட்டி நடந்தன. இதில் இந்தியா, 21ல் தங்கம் வென்று சாதித்தது. தவிர, 22 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கம் வசப்படுத்தியது.
* இலங்கை அணி 9 தங்கம், 9 வெள்ளி, 17 வெண்கலம் என 35 பதக்கம் வென்று இரண்டாவது இடம் பிடித்தது. 3 வெண்கலம் வென்ற வங்கதேசம் மூன்றாவது இடம் பெற்றது.