/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
டேபிள் டென்னிஸ்: சரத் கமல் வெற்றி
/
டேபிள் டென்னிஸ்: சரத் கமல் வெற்றி
ADDED : மார் 28, 2025 10:23 PM

சென்னை: 'ஸ்டார் கன்டென்டர்' டேபிள் டென்னிஸ் 2வது சுற்றில் தமிழக வீரர் சரத் கமல் வெற்றி பெற்றார்.
சென்னையில், டபிள்யு.டி.டி., 'ஸ்டார் கன்டென்டர்' டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் 2வது சுற்றில் இந்தியாவின் அஜந்தா சரத் கமல், ஆஸ்திரேலியாவின் நிக்கோலஸ் லம் மோதினர். சரத் கமல் 3-0 (11-8, 11-8, 11-9) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் மானவ் தாக்கர், ஆஸ்திரேலியாவின் பின் லுா மோதினர். இதில் மானவ் 3-1 (11-4, 7-11, 11-5, 11-8) என வெற்றி பெற்றார்.
மற்ற 2வது சுற்றுப் போட்டிகளில் இந்தியாவின் பயாஸ் ஜெயின், ஹர்மீத் தேசாய் தோல்வியடைந்தனர். இந்தியாவின் ஸ்னேஹித் 3-2 (8-11, 11-13, 11-9, 11-7, 12-10) என ஜப்பானின் யூகியா உடாவை வீழ்த்தினார்.
மணிகா தோல்வி: பெண்கள் ஒற்றையர் 2வது சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, சீனதைபேயின் ஹுவாங் யு-ஜீ மோதினர். மணிகா 1-3 (7-11, 10-12, 11-7, 9-11) என தோல்வியடைந்தார்.
மற்றொரு 2வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா 2-3 (6-11, 9-11, 11-6, 11-4, 7-11) என சகவீராங்கனை கிருத்விகா ராயிடம் வீழ்ந்தார்.
இந்திய ஜோடி அபாரம்: ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சரத் கமல், ஸ்னேஹித் ஜோடி 3-2 (11-9, 9-11, 6-11, 11-8, 14-12) என சகநாட்டை சேர்ந்த மானுஷ் ஷா, மானவ் தாக்கர் ஜோடியை வீழ்த்தியது. 'ரவுண்ட்-16' போட்டியில் இந்தியாவின் சத்யன், ஹர்மீத் தேசாய் ஜோடி தோல்வியடைந்தது.
கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் மானுஷ் ஷா, தியா ஜோடி 0-3 (7-11, 9-11, 3-11) என தென் கொரியாவின் ஜோங்ஹூன் லிம், யுபின் ஷின் ஜோடியிடம் வீழ்ந்தது.