தியாவுக்கு ரூ. 37.20 லட்சம் * அல்டிமேட் டேபிள் டென்னிஸ் ஏலத்தில்
தியாவுக்கு ரூ. 37.20 லட்சம் * அல்டிமேட் டேபிள் டென்னிஸ் ஏலத்தில்
ADDED : ஏப் 28, 2026 11:04 PM

மும்பை: யு.டி.டி., தொடருக்கான ஏலத்தில் இந்திய வீராங்கனை தியா சிட்டாலே, அதிகபட்சம் ரூ. 37.20 லட்சத்துக்கு வாங்கப்பட்டார்.
இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் 'அல்டிமேட் டேபிள் டென்னிஸ்' (யு.டி.டி.,) தொடர் நடத்தப்படுகிறது. 8 அணிகள் பங்கேற்கும் 7வது சீசன், வரும் ஜூலை 9-26ல் கோவாவில் நடக்கவுள்ளது. இதற்கான வீரர், வீராங்கனைகள் ஏலம் நேற்று மும்பையில் நடந்தது.
ஒவ்வொரு அணியும் ரூ. 1 கோடி வரை செலவு செய்தன. அடிப்படை தொகை என 4 பிரிவுகளாக (ரூ. 20, 12, 7, 3 லட்சம்) பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு அணியிலும் அன்னிய வீரர், வீராங்கனை தலா ஒருவர் உட்பட 6 பேர் இடம் பெறுவர்.
மணிகா பத்ரா (ரூ. 27 லட்சம், ஆமதாபாத்), சத்யன் (ரூ. 27 லட்சம், டில்லி), ஆகாஷ் பால் (ரூ. 9.45 லட்சம், மும்பை), அன்குர் பட்டாச்சார்ஜீ (ரூ. 9.45 லட்சம், கொல்கட்டா) என நான்கு இந்திய நடத்திரங்களை, அந்தந்த அணிகள் தக்கவைத்துக் கொண்டன.
யாருக்கு அதிகம்
அடுத்து நடந்த ஏலத்தில், பெண்கள் பிரிவில் ருமேனியாவின் பெர்னாடெட்டே, அதிகபட்சம் ரூ. 40 லட்சத்திற்கு கோவா அணி வாங்கியது. கடந்த ஆண்டு டில்லி அணியில் இருந்த இந்தியாவின் தியா சிட்டாலேவை, இம்முறை ரூ. 37.40 லட்சம் கொடுத்து, புனே அணி தட்டிச் சென்றது. இவர், அதிக தொகைக்கு வாங்கப்பட்ட இந்திய வீராங்கனை ஆனார்.
ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் மனுஷ் ஷா, ரூ. 37.20 லட்சத்துக்கு, மும்பை அணியில் இணைந்தார். தவிர மானவ் தக்கார் (ரூ. 36 லட்சம்), யாங்ஜி லியு (ரூ.32 லட்சம்) உ.பி., அணியினால் வாங்கப்பட்டனர்.
இந்திய இளம் வீராங்கனைகள் சிண்ட்ரெல்லா (ரூ. 17 லட்சம்) கோவா, திவ்யான்ஷி (ரூ. 10.40 லட்சம்) டில்லி, ஆயிஹா (ரூ. 20.20 லட்சம்) கொல்கட்டா அணியில் இணைந்தனர்.
'டாப்-3'
ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட 'டாப்-3' நட்சத்திரங்கள்:
வீரர்/வீராங்கனை அணி ஏலத் தொகை
பெர்னாடெட்டே கோவா ரூ. 40 லட்சம்
தியா சிட்டாலே புனே ரூ. 37.20 லட்சம்
மனுஷ் ஷா மும்பை ரூ. 37.20 லட்சம்
