திவ்யான்ஷிக்கு இரண்டு கோப்பை * டேபிள் டென்னிசில் அபாரம்
திவ்யான்ஷிக்கு இரண்டு கோப்பை * டேபிள் டென்னிசில் அபாரம்
ADDED : ஜூன் 01, 2026 11:14 PM

பிரிஷ்டினா: சர்வதேச பீடர் டேபிள் டென்னிசில் இந்தியாவின் 15 வயது வீராங்கனை திவ்யான்ஷி, இரண்டு கோப்பை வென்றார்.
கொசோவாவின் பிரிஷ்டினா நகரில் டபிள்யு.டி.டி., சார்பில் 'பீடர்' டேபிள் டென்னிஸ் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திவ்யான்ஷி, இத்தொடரின் 'நம்பர்-1' வீராங்கனை யே இ தியானை சந்தித்தார். முதல் செட்டை 11-6 என வென்ற திவ்யான்ஷி, அடுத்த செட்டை 9-11 என இழந்தார்.
மூன்றாவது செட்டை 11-7 என கைப்பற்றிய இவர், நான்காவது செட்டை 8-11 என கோட்டை விட்டார். ஐந்தாவது, கடைசி செட்டில் சுதாரித்த திவ்யான்ஷி, 11-6 என வசப்படுத்தினார். முடிவில் திவ்யான்ஷி 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, கோப்பை வென்றார்.
இரட்டையரில் அபாரம்
பெண்கள் இரட்டையர் பைனலில் இந்தியாவின் திவ்யான்ஷி, சிண்ட்ரெல்லா ஜோடி, ஜப்பானின் ஆவோகி, முரமட்சு ஜோடியை எதிர்கொண்டது. போராடிய இந்திய ஜோடி 3-2 என்ற (11-7, 12-14, 14-12, 8-11, 11-7) கணக்கில் வெற்றி பெற்று, கோப்பை தட்டிச் சென்றது.
