/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தமிழகம் இரண்டாவது இடம் * கேலோ இந்தியா விளையாட்டில் முதன் முறையாக...
/
தமிழகம் இரண்டாவது இடம் * கேலோ இந்தியா விளையாட்டில் முதன் முறையாக...
தமிழகம் இரண்டாவது இடம் * கேலோ இந்தியா விளையாட்டில் முதன் முறையாக...
தமிழகம் இரண்டாவது இடம் * கேலோ இந்தியா விளையாட்டில் முதன் முறையாக...
ADDED : ஜன 31, 2024 11:10 PM

சென்னை: கேலோ இந்தியா விளையாட்டு பதக்க பட்டியலில் முதன் முறையாக தமிழகம் இரண்டாவது இடம் பிடித்தது. 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்கள் வென்றது.
கேலோ இந்தியா யூத் விளையாட்டின் ஆறாவது சீசன் தமிழகத்தின் சென்னை, மதுரை, கோவை, திருச்சியில் நடந்தன. நேற்று கடைசி நாளில் கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், நீச்சல் போட்டிகள் நடந்தன. ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் ரெத்தின் பிரனவ், மகாராஷ்டிராவின் சமீர் மோதினர். இதில் சிறப்பாக செயல்பட்ட பிரனவ், 2-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் மாயா ராஜேஸ்வரி ரேவதி, தெலுங்கானாவின் லட்சுமி ஸ்ரீயை சந்தித்தார். இதில் அசத்திய மாயா ராஜேஸ்வரி, 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் தட்டிச் சென்றார்.
நீச்சலில் தங்கம்
பெண்களுக்கான நீச்சல் 50 மீ., பிரஸ்ட்டிரோக் பிரிவில் தமிழகத்தின் பிரஷேத்தா, ஜாய்ஸ்ரீ பைனலில் களமிறங்கினர். இதில் பந்தய துாரத்தை 34.91 வினாடி நேரத்தில் கடந்து, முதலிடம் பெற்ற பிரஷேத்தா, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். ஜாய்ஸ்ரீ 35.15 வினாடி நேரத்தில் வந்து மூன்றாவது இடம் பெற்று, வெண்கலம் வென்றார்.
ஆண்கள் 4*100 மீ., ரிலேயில் தமிழகத்தின் கவின் ராஜ் விஜயகுமார் அடங்கிய அணி, பந்தய துாரத்தை 3 நிமிடம், 42.86 வினாடி நேரத்தில் கடந்து, மூன்றாவது இடம் பிடித்து வெண்கல பதக்கம் கைப்பற்றியது. மகாராஷ்டிரா (3:35.15), கர்நாடகா (3:37.06) அணிகள் தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றன.
1500 மீ., பிரீஸ்டைல் நீச்சலில் தமிழக வீரர் கவின் ராஜ் விஜயகுமார் (17 நிமிடம், 06.77 வினாடி) 7 வது இடம் பிடித்து ஏமாற்றினார். பெண்களுக்கான 50 மீ., பேக்ஸ்டிரோக், நீச்சலில் தமிழகத்தின் ஜாய்ஸ்ரீ (35.15 வினாடி) ஆறாவது இடம் பெற்றார்.
பாலக் அபாரம்
பெண்களுக்கான 200 மீ., பிரஸ்ட்டிரோக் நீச்சலில் மகாராஷ்டிராவின் பாலக் ஜோஷி, 2 நிமிடம், 18.59 வினாடி நேரத்தில் வந்து, தனது முந்தைய தேசிய சாதனையை தகர்த்து, தங்கம் கைப்பற்றினார்.
பஞ்சாப் ஏமாற்றம்
ஆண்கள் கால்பந்து பைனலில் மேஹாலயா, பஞ்சாப் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
முதன் முறை
நேற்றைய கடைசி நாளில் 3 தங்கம், 3 வெண்கலம் என தமிழகம் 6 பதக்கம் வசப்படுத்தியது. இத்தொடரில் தமிழக அணி 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்கள் வென்று, பட்டியலில் முதன் முறையாக இரண்டாவது இடம் பிடித்தது. இதற்கு முன் 8 வது இடம் பிடித்ததே அதிகம்.
மகாராஷ்டிரா 'டாப்'
கேலோ இந்தியா யூத் விளையாட்டு 6வது சீசனில் 56 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 157 பதக்கங்கள் கைப்பற்றிய மகாராஷ்டிரா, பட்டியலில் முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனது.
'டாப்-5' விபரம்
அணி தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
மகாராஷ்டிரா 56 48 53 157
தமிழகம் 38 20 39 97
ஹரியானா 35 22 46 103
டில்லி 13 18 24 55
ராஜஸ்தான் 13 17 17 47
20 சாதனை
தமிழகத்தில் நடந்த கேலோ இந்தியா போட்டியில் மொத்தம் 4454 வீரர், வீராங்கனைகள் 26 போட்டிகளில் பங்கேற்றனர். கேலோ விளையாட்டு, தேசிய யூத் என மொத்தம் 20 சாதனை படைக்கப்பட்டன.
ஒலிம்பிக்கில் இந்தியா சாதிக்கும்
''அடுத்த ஒலிம்பிக்கில் இந்திய வீரர், வீராங்கனைகள் சாதிப்பர்,'' என, அனுராக்சிங் தாக்கூர் பேசினார்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர், 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த மஹாராஷ்டிரா, இரண்டாம் இடம் பிடித்த தமிழகம், மூன்றாம் இடம் பிடித்த ஹரியானா மாநில அணிகளுக்கு வெற்றிக் கோப்பைகளை வழங்கினார்.
அவர் பேசியதாவது:
தமிழகத்தில் நடந்த கேலோ இந்தியா தனித்தன்மையுடன் நடந்தது. அனைவருக்கும் அருமையான விருந்தோம்பலை அளித்த தமிழக மக்களுக்கும், விளையாட்டு சிறப்பாக நடக்க உதவிய தமிழக அரசுக்கும் எனது பாராட்டு. இந்த சீசனில் 2,307 வீரர்கள், 2,147 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
கிட்டத்தட்ட சரிபாதி அளவுக்கு பெண்கள் பங்கேற்றது பெருமையாக உள்ளது. இதில் பங்கேற்று பதக்கம் வென்றவர்கள் அனைவரும் வளமான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் இல்லை. அவர்களுக்கு ஏழ்மையை சவாலாக எடுத்து வென்ற தனித்தனி கதைகள் உள்ளன. பளு துாக்குதல் பிரிவில் புதிய சாதனைகள் படைக்கப்பட்டு உள்ளன. அதற்கு காரணமான சஞ்சனா, கீர்த்தனா, ஆர்த்தி உள்ளிட்டோருக்கு பாராட்டுகள். கிழக்கிந்திய மாநிலங்கள், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களின் பின்தங்கிய பகுதிகளில் இருந்தும் பலர் சாதித்துள்ளனர்.
அடுத்து நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா புதிய சாதனை படைக்கும். அதற்கான முன்னோட்டமாக இது உள்ளது. வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம். ஆனால், திறமையின் வெளிப்பாடுதான் உன்னதம். எங்கும் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த தவற வேண்டாம். உங்களின் திறமையை பதக்கத்தால் அலங்கரித்து அங்கீகரியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
விளையாட்டு தலைநகர்
அமைச்சர் உதயநிதி கூறுகையில்,'' நாட்டின் விளையாட்டு தலைநகரம் ஆகும் அனைத்து தகுதிகளும் தமிழகத்திற்கு உள்ளன என்பது, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு நிரூபித்துள்ளது. தமிழகத்தில், விளையாட்டை ஒரு இயக்கமாக செயல்படுத்த வேண்டும் என, முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில், தமிழகத்தில் எல்லா நிலைகளிலும், எல்லா இடங்களிலும் உள்ள திறமையாளர்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்,'' என்றார்.