ADDED : ஜன 26, 2026 10:19 PM

விஜ்க் ஆன் ஜீ: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 8வது சுற்றில் இந்தியாவின் குகேஷ் வெற்றி பெற்றார்.
நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் செஸ் தொடரின் 88வது சீசன் நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், அர்ஜுன் எரிகைசி, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர்.
எட்டாவது சுற்றில், 'நடப்பு உலக சாம்பியன்' குகேஷ், சுலோவேனியாவின் விளாடிமிர் பெடோசீவ் மோதினர். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 41வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி (கருப்பு), அரவிந்த் சிதம்பரம் (வெள்ளை) மோதிய மற்றொரு 8வது சுற்று போட்டி 76வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இந்தியாவின் பிரக்ஞானந்தா (கருப்பு), துருக்கியின் யாகிஸ் கான் எர்டோக்மஸ் (வெள்ளை) மோதிய போட்டி 46வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
மற்றொரு போட்டியில் நெதர்லாந்தின் அனிஷ் கிரி (கருப்பு), 51வது நகர்த்தலில் உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக்கை (வெள்ளை) தோற்கடித்தார்.
எட்டு சுற்றுகளின் முடிவில் உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (5.5 புள்ளி), ஜாவோகிர் சின்டாரோவ் (5) முதலிரண்டு இடங்களில் நீடிக்கின்றனர். குகேஷ், அனிஷ் கிரி உள்ளிட்டோர் தலா 4 புள்ளிகளுடன் 6வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
