ADDED : நவ 19, 2026 11:15 PM

புதுடில்லி: ‘டைம்100 நெக்ஸ்ட் இந்தியா’ பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷி, ஹர்மன்பிரீத் கவுர், சவிதா புனியா, வித்யா உள்ளிட்ட 9 இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்க செய்தி இதழான ‘டைம்’ சார்பில், இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் திறன் கொண்ட 100 பேரை அங்கீகரிக்கும் வகையில், ‘டைம்100 நெக்ஸ்ட் இந்தியா’ பட்டியல் வெளியானது. இதில் விளையாட்டில் சாதித்த 9 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதற்கான விழா, வரும் டிச. 12ல் மும்பையில் நடக்கவுள்ளது.
புத்தாக்க சிந்தனையாளர்கள் பிரிவில், 15 வயது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இடம் பிடித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ‘டி–20’ல் களமிறங்கிய வைபவ், சர்வதேச அரங்கில் அறிமுகமான இளம் வீரரானார். சமீபத்தில் பீஹார் அணியை வழிநடத்திய இவர், ‘டி–20’ல் விளையாடிய இளம் கேப்டன் என்ற சாதனை படைத்தார். இவரை தவிர, ஒலிம்பிக் (2020ல் வெள்ளி), உலக சாம்பியன்ஷிப்பில் (2017ல் தங்கம், 2022, 2025ல் வெள்ளி) பதக்கம் கைப்பற்றிய பளுதுாக்குதல் வீராங்கனை மீராபாய் சானு 32, ஆசிய விளையாட்டு (2026) வில்வித்தையில் 2 தங்கம் வென்ற கும்கும் 17, ஆகியோரும் இப்பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.
அதிசய திறனாளிகள் பிரிவில் ஒலிம்பிக் (2020ல் வெண்கலம்), உலக சாம்பியன்ஷிப்பில் (2023ல் தங்கம், 2018, 2019ல் வெண்கலம்) பதக்கம் கைப்பற்றிய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா 29, நடப்பு உலக செஸ் சாம்பியன் குகேஷ் 20, சமீபத்திய ஆசிய விளையாட்டில் (2026), பி.டி. உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை முறியடித்த தடகள வீராங்கனை (400 மீ., தடை தாண்டும் ஓட்டம்) தமிழகத்தின் வித்யா ராம்ராஜ் 28, இடம் பெற்றுள்ளனர்.
தலைவர்கள் பிரிவில், மூன்று முறை உலகின் சிறந்த கோல்கீப்பருக்கான விருது வென்ற சவிதா புனியா 36, உள்ளார். அதிக போட்டிகளில் (321) விளையாடிய இந்திய வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இவர், ஆசிய விளையாட்டில் (2026) தங்கம் கைப்பற்றிய இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.
‘அட்வகேட்ஸ்’ பிரிவில், ஐ.சி.சி., உலக கோப்பை (2025) பெற்றுத்தந்த முன்னாள் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 37, ‘கிராண்ட்ஸ்லாம்’ இரட்டையர் பிரிவில் 6 பட்டம் (2009, 2012, 2014ல் கலப்பு இரட்டையர், 2015ல் 2, 2016ல் பெண்கள் இரட்டையர்) வென்ற டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 40, இடம் பிடித்துள்ளனர்.
