ADDED : ஏப் 21, 2024 10:28 PM

ஷாங்காய்: சீன கிராண்ட் பிரிக்ஸ் 'பார்முலா-1' கார்பந்தயத்தில் 'ரெட் புல்' அணியின் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
நடப்பு சீசனுக்கான கிராண்ட் பிரிக்ஸ் 'பார்முலா-1' கார்பந்தயம் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 5வது சுற்று சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்தது. இதில் பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 40 நிமிடம், 52.554 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த 'ரெட் புல் ரேசிங்-ஹோண்டா' அணியின் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இது, நடப்பு சீசனில் இவர் வென்ற 4வது பட்டம். ஏற்கனவே பக்ரைன், சவுதி அரேபியா, ஜப்பானில் நடந்த போட்டியில் கோப்பை வென்றிருந்தார். தவிர இது, ஒட்டுமொத்தமாக இவர் கைப்பற்றிய 58வது சாம்பியன் பட்டம்.
அடுத்த இரண்டு இடங்களை 'மெக்லாரன்-மெர்சிடஸ்' அணியின் பிரிட்டன் வீரர் லாண்டோ நோரிஸ், 'ரெட் புல் ரேசிங்-ஹோண்டா' அணியின் மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரெஸ் கைப்பற்றினர்.
