/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஒலிம்பிக் தகுதி... வினேஷ் மகிழ்ச்சி
/
ஒலிம்பிக் தகுதி... வினேஷ் மகிழ்ச்சி
ADDED : ஏப் 22, 2024 10:55 PM

புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்ற உற்சாகத்தில் உள்ளார் வினேஷ் போகத்.
கிர்கிஸ்தானில் ஆசிய ஒலிம்பிக் மல்யுத்த தகுதி போட்டி நடந்தது. வழக்கமாக 53 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கும் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், இம்முறை 50 கிலோ பிரிவில் பங்கேற்றார். அரையிறுதியில் கஜகஸ்தானின் லாராவை சாய்த்து பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார்.
இந்திய மல்யுத்த சங்கத் தலைவராக இருந்த பிரிஜ்பூஷண் சிங்கிற்கு எதிரான போராட்டத்தில் பஜ்ரங் புனியா, சாக் ஷி மாலிக்குடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர் வினேஷ் போகத். ஒருவழியாக இதில் இருந்து மீண்டு, 18 மாதத்திற்குப் பின் சர்வதேச போட்டியில் பங்கேற்று, ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார்.
இதுகுறித்து வினேஷ் போகத் 29, கூறியது:
வழக்கமாக எனது எடை 56 கிலோ. இதில் இருந்து குறைத்து 50 கிலோ பிரிவில் பங்கேற்பது மிகவும் 'ரிஸ்க்' என அனைவரும் தெரிவித்தனர். காயம் அடைய வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் 'அட்வைஸ்' செய்தனர். ஆனால் 53 கிலோ பிரிவில் அன்டிம் ஏற்கனவே தகுதி பெற்று விட்டார்.
எடை காரணத்திற்காக ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல், போட்டிகளை 'டிவி'யில் பார்த்துக் கொண்டிருந்தால் அது வருத்தத்தை தரும். வேறு வழியில்லாத நிலையில் எடையை குறைத்து களமிறங்கினேன். கடைசியில் 50 கிலோ பிரிவில் தேசத்திற்காக ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றது பெருமையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

