ADDED : மே 03, 2026 09:00 PM

புதுடில்லி: இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 31. பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) சிறப்பாக செயல்பட்ட இவர், ஒலிம்பிக் மல்யுத்த பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனையானார். துரதிருஷ்டவசமாக பைனலுக்கு முன், இவரது உடல் எடை 50 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
பின் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ், ஹரியானாவில் காங்., கட்சியில் இணைந்து எம்.எல்.ஏ., ஆனார். தற்போது ஓய்வு முடிவை திரும்ப பெற்ற இவர், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் (2028) பங்கேற்கும் வகையில், மீண்டும் மல்யுத்த போட்டியில் களமிறங்க உள்ளார். உ.பி.,யின் கோண்டா நகரில் மே 10-12ல் நடக்கவுள்ள சீனியர் ரேங்கிங் தொடரில் 57 கிலோ எடைப்பிரிவில் களமிறங்குகிறார்.
இத்தொடர் நடக்கும் கோண்டாவில், முன்னாள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷனுக்கு ஆதரவு வலுவாக உள்ளது. முன்னதாக இவர் மீது வினேஷ் போகத் உள்ளிட்ட 6 இந்திய வீராங்கனைகள் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இதனால் தனக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் வினேஷ் போகத் உள்ளார்.
வினேஷ் கூறுகையில், ''பிரிஜ் பூஷனுக்கு ஆதரவு அதிகமாக உள்ள இடத்தில் ரேங்கிங் தொடர் நடப்பதால், எனது போட்டியின் முடிவில் அவரது தலையீடு இருக்கக்கூடும். இத்தொடரின் போது எனக்கோ, எனது குழுவினருக்கோ ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு இந்திய அரசே பொறுப்பு,'' என்றார்.
மறுப்பு
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில், ''தேசிய ரேங்கிங் தொடருக்கான இடத்தை மாற்றம் செய்ய இயலாது. வினேஷ் போகத், தனது பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை. அவரது பாதுகாப்புக்கு, தனிப்பட்ட முறையில் நானே பொறுப்பேற்கிறேன். உலக மல்யுத்த கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட நடுவர்கள் போட்டிகளை நடத்துகின்றனர். போட்டியில் எவ்வித பாரபட்சத்திற்கும் இடம் இல்லை,'' என்றார்.
