ADDED : ஆக 08, 2024 11:16 PM

புனே: பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ஸ்வப்னிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ஸ்வப்னில் குசாலே 29. பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இவர், 50 மீ., 'ரைபிள்-3 பொசிஷன்ஸ்' பிரிவில் வெண்கலம் வென்றார். இது, இம்முறை இந்தியாவுக்கு கிடைத்த 3வது பதக்கமானது.
மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கம்பல்வாடி கிராமத்தை சேர்ந்த ஸ்வப்னில், நேற்று தாயகம் திரும்பினார். டில்லி வந்த இவர், மத்திய விளையாட்டு இணை அமைச்சரை சந்தித்தார். பின் சொந்த ஊருக்கு சென்றார். அப்போது புனேயில் ரசிகர்கள் இவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதுகுறித்து ஸ்வப்னில் கூறுகையில், ''இப்பதக்கம் என்னுடையது அல்ல. நம் நாட்டிற்கும், மகாராஷ்டிராவுக்கும் சொந்தமானது. மத்திய, மாநில அரசுகள், தேசிய துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு என ஒவ்வொருவரும் ஆதரவு அளித்தனர். எனது பயிற்சியாளர்களுக்கு நன்றி. அடுத்த முறை தங்கம் வெல்ல முயற்சிப்பேன்,'' என்றார்.